மோதல்களுக்கு மத்தியில் உலகின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இந்தியா மாறி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரவில் நடைபெற்ற இளைஞர்களுக்கான கருத்தரங்கில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, கொரோனா தொற்றுக்காலத்தில் உலகின் பல நாட்களுக்கு தடுப்பூசிகளையும், மருந்துகளையும் இந்தியா வழங்கியது என்றார்.
மோதலும், நிச்சயமற்ற தன்மையும் நிலவும் நிலையில், உலகின் வினியோக சங்கிலியை மீட்டெடுக்கும் பணியிலும் இந்தியா திறம்பட செயலாற்றுவதாக அவர் கூறினார். இதன் மூலம் உலகின் புதிய நம்பிக்கையாக நாடு உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மனித குலத்திற்கு யோகா மூலம் இந்தியா பாதை காட்டி உள்ளதாகவும், ஆயுர்வேதத்தின் சக்தியை அனைவருக்கும் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். கம்ப்யூட்டர் மென்பொருள் முதல் விண்வெளி ஆய்வு வரை அனைத்திலும் புதிய எதிர்காலத்தை உருவாக்கும் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இப்போது மத்திய அரசின் செயல்படும் விதம், சமூகத்தின் சிந்திக்கும் போக்கு மாறி உள்ளதாகவும், பொதுப்பணிகளில் மக்கள் பங்கேற்பு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். இதற்கு முன்பு இந்தியாவில் முடியாது என்று கருத்தப்பட்ட பல காரியங்கள் இப்போது வெற்றிகரமாக முடிக்கப்படுவதை உலகமே பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்போது புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பண்டைய பாரம்பரியத்துடன் கூடிய, முன்னோக்கு பார்வை புதிய இந்தியாவின் அணுகுமுறையாக உள்ளது என்று அவர் கூறினார்.
பழங்கால கலாச்சாரத்துடன், புதிய சிந்தனைகளை இணைத்து புதிய இந்தியா ஒட்டுமொத்த மானுட சமூகத்திற்கும் வழிகாட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.