தீவிரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்; தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல்; காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழும் அவர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார். அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இந்த சூழலில், யாசின் மாலிக் மீதான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாசின் மாலிக் மீது இந்தியா பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோடித்துள்ளது. இதற்காக இந்தியத் தூதரை நேரில் வரவழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்திருக்கிறது. செய்யாத குற்றங்களுக்காக 2019-ம் ஆண்டு முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உடல்நலம் சரியில்லாத அவரை சிறைக்குள் இந்திய அதிகாரிகள் சித்ரவதை செய்து வருகின்றனர். மேலும், அவருக்கான மருத்துவ சிகிச்சைகளும் மறுக்கப்படுகின்றன. இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். இந்த எதேச்சதிகாரமான போக்கை இந்தியா கைவிட்டு, யாசின் மாலிக்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அப்போதுதான் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். யாசின் மாலிக் விவகாரத்தில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM