பாட்டியாலா:
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் பரவலாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பஞ்சாப் காங்கிரசின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள பரபரப்பான மார்க்கர் பகுதியில் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் யானை மீது அமர்ந்து பயணம் செய்து, பதாகையை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இப்போராட்டம் குறித்து அவர் கூறுகையில், ‘விலைவாசியானது யானை அளவு உயர்ந்துள்ளது. கடுகு எண்ணெய்யின் விலை ரூ. 75-லிருந்து ரூ.190-ஆகவும் பருப்புகளின் விலை ரூ.80-லிருந்து ரூ.130 ஆகவும் உயர்ந்துள்ளது. மக்களால் கோழியை இந்த விலையில் வாங்க முடியும். கோழியும் பருப்பும் தற்போது ஒரே மாதிரியாகிவிட்டது” என்று கூறினார்.
சமையல் எரிவாயுவின் விலை ரூ. 3.50 இன்று உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சமையல் எரிவாயுவின் விலை ரூ. 1000- ஐ தாண்டியுள்ளது. பெட்ரோல் விலை ரூ.100ஐ எட்டியதில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் இது இரண்டாவது விலை உயர்வாகும்.
2012-ஆம் ஆண்டு பணவீக்கத்தை கண்டித்து பாஜக நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது நவ்ஜோத் சிங் சித்துவும் அதில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.