ரணில் பிரதமரானதை இலங்கை மக்கள் கடுமையாக எதிர்க்காததது ஏன்? – ஒரு விரைவுப் பார்வை

இலங்கையில் மிக நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க கடந்த 12-ம் திகதி இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஜனாதிபதி, ரணிலைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது. கடந்த ஆட்சியிலும் பிரதமராகப் பதவி வகித்துத் தோல்வியுற்றிருந்த ரணில், ராஜபக்‌ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால், என்னதான் வெளிப்பார்வைக்கு ராஜபக்‌ச குடும்பத்தின் குற்றங்கள்மீது, தான் உக்கிரமாக இருப்பதுபோல அவர் காட்டிக்கொண்டாலும், அவர்களுக்கிடையில் நட்புரீதியான மென்மையான அணுகுமுறையே இருந்துவருகிறது. இது ராஜபக்‌ச குடும்பத்துக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, மக்களால் எப்போதும் தோல்வியுற்ற அரசியல் தலைவராகவே பார்க்கப்படும் புதிய பிரதமர் ரணிலை இலங்கையின் மீட்பரென்றும், இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் அவர் தீர்த்துவைப்பார் என்றும் கருத முடியாது. அவரையும், மகிந்த ராஜபக்‌சவையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். என்றாலும், ரணில் பிரதமராகப் பதவியேற்றதைப் பொதுமக்கள் கடுமையாக எதிர்க்காமல் இருப்பதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

அவசரமாகவும் காலம் தாழ்த்தாமலும் இலங்கையில் ஓர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்ற இக்கட்டான நிலைமை முதன்மையான காரணி. இலங்கையில் பிரதமரோ அரசாங்கமோ இல்லாத நிலைமை நீடித்தால் உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் என இலங்கை மக்கள் சந்தித்துவரும் நெருக்கடிகள் அனைத்தும் இன்னும் தீவிரமடையும். நாடு முழுவதும் வன்முறை மேலோங்கி, எவரும் தமக்குத் தேவையானவற்றைக் கொள்ளையடிக்க முற்படும் வாய்ப்புகள் அதிகரித்ததால், மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை என்பது அடுத்த முக்கிய காரணியாக இருந்தது.

எனவே, இக்கட்டான இந்நேரத்தில், திவாலாகியுள்ள நாட்டுக்குப் பொறுப்பேற்கத் தைரியமாகவும், நம்பிக்கையோடும் முன்வரும் ஒருவருக்குப் பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டிய கட்டாயம் உருவானது.

அனைத்து நாடுகளுடனும் நெருக்கத்தையும் சிறந்த நட்பையும் பேணிவரும் அவரால் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்தும் கடனுதவிகளையும் மருத்துவ உதவிகளையும் பெற முடியும். என்றாலும், இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வு மாத்திரமே கிடைக்கும் என்பதையும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போதும் இலங்கையைத் தாங்க முடியாதளவு சர்வதேசக் கடன்கள் அழுத்திக்கொண்டிருக்கும் நிலையில், இன்னும் இன்னும் கடனாளியாக ஆவதும், நாட்டின் இடங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுவதும் தொடர்ந்தும் நீடித்துக்கொண்டிருந்தால், அது எதிர்காலத்தில் இலங்கைக்குச் சாதகமாக அமையுமா என்பது குறித்தும் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

> இது, இலங்கையைச் சேர்ந்த கவிஞர் எம்.ரிஷான் ஷெரீப் எழுதிய ‘இந்து தமிழ் திசை’ ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.