புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. 161-வது சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதால், 142-வது சட்டப்பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தானு என்ற பெண், மனித வெடிகுண்டாக செயல்பட்டு படுகொலை செய்தார்.
இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். தானு தனது பெல்ட்டில் கட்டியிருந்த வெடிகுண்டுக்கு, பேட்டரிகள் வாங்கி கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது. எதற்காக பேட்டரி வாங்கி கொடுக்கிறோம் என தனக்கு தெரியாது என்ற பேரறிவாளனின் வாக்கு மூலம் நிராகரிக்கப்பட்டு, 19 வயதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை உச்ச நீதிமன்றம் கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம் உறுதி செய்தது. தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என இவர்கள் தாக்கல் செய்த மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின் நளினியின் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக கடந்த 2000-ம் ஆண்டில் குறைக்கப்பட்டது.
அதன் பின்னர் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். ஆனால் அப்போதைய குடியரசுத் தலைவர்கள் கே.ஆர்.நாராயணன், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆகியோர் இவர்களின் இம்மனுக்களை நிலுவையில் வைத்தனர். அதன்பின் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிரதீபா பாட்டீல், இந்த மனுக்களை கடந்த 2011-ல் தள்ளுபடி செய்தார்.
11 ஆண்டுகளுக்கும் மேலாக கருணை மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. அதன்பின் இவர்களது மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியது. அதன்பின்னர், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது.
இவர்களை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தனக்குள்ள சிறப்பு அதிகாரம் 161-ன் கீழ் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது. அதனால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க கோரி ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இந்நிலையில் உடல்நிலை பாதித்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், போபண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்திய தண்டனை சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. ஆளுநருக்கு அல்ல என்று மத்திய அரசு வாதிட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “அப்படியானால், சட்டப்பிரிவின் 161-ஏ-ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மதிப்பற்றதாகிவிடும். கடந்த 70 ஆண்டுகளாக கொலை வழக்குகளில் ஆளுநர்கள் அளித்த மன்னிப்புகள் செல்லாத தாகிவிடும்” என்றனர். தமிழக அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி வாதிடும்போது, “கருணை மனு மீது குடியரசுத் தலைவரின் முடிவுக்கு
காத்திருப்பது அபத்தமானது” என்றார்.
அதன்பின் நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில், தகுந்த பரிசீலனை அடிப்படையில் மாநில அமைச்சரவை முடிவு செய்து, பேரறிவாளனை விடுவிக்க கடந்த 2018-ம் ஆண்டு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், ஆளுநர் 161-வது சட்டப்பிரிவின் கீழ் முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதாலும், மன்னிப்பு அளிப்பதில் ஆளுநருக்கு ஏற்பட்ட தயக்கம் ஆகியவற்றாலும் உச்ச நீதிமன்றம் 142-வது சட்டப் பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார்” என நீதிபதிகள் கூறினர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பேரறிவாளனின் பிணைப் பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புழல் மத்திய சிறை தண்டனை பதிவேடுகளில் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு 18.05.2022 அன்று விடுதலை செய்யப்பட்டார் என சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் தனது உத்தர வில் குறிப்பிட்டுள்ளார்.