சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது இரண்டாவது மனைவி வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(45) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு லதா(40) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி பிரசன்னா(17), மதுமிதா (15), என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பிரியதர்ஷினி என்பவருடன் ரமேஷ் இரண்டாவதாக குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று பிரியதர்ஷினி வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிய ரமேஷ் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி அருகில் இருந்தவரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.
அங்கு ரமேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM