வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டேராடூன் : கேதார்நாத் கோவிலில் பக்தர் ஒருவர், வளர்ப்பு நாயை அழைத்து சென்று நந்தி சிலையை தொட்டு வணங்க வைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. குளிர் மற்றும் மழைக் காலங்களில் ஆறு மாதங்களுக்கு இந்த தலங்கள் மூடப்பட்டு இருக்கும்; கோடை காலத்தில் திறக்கப்படும். கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த மே 6ம் தேதி கேதார்நாத் கோவில் திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்டது முதல் தற்போது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், கேதார்நாத் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர், தனது வளர்ப்பு நாயை அங்குள்ள நந்தி சிலையை தொட்டு வணங்க செய்வதுடன், சாமியார் ஒருவரிடம் ஆசி பெற செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேதார்நாத் கோவில் கமிட்டி தலைவர், ‘ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். சாமியார் மற்றும் நிர்வாகிகள் இது போன்ற செயலை தயவு செய்து அனுமதிக்க வேண்டாம்’ என கேட்டுகொண்டுள்ளார்.
Advertisement