தெலங்கானா மாநிலம், மாதப்பூரில் உள்ள ஷில்பகலா வேதிகாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த புலனாய்வு பணியகத்தின் (ஐ.பி) உதவி இயக்குநர், மேடையிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போலீஸார், “வரும் 20-ம் தேதி ஷில்பகலா வேதிகாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.
இந்த நிகச்சிக்கான பாதுகாப்புப் பணிகளை ஐ.பி உதவி இயக்குநர் குமார் அம்ரேஷ் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஆடிட்டோரியத்தின் மேடையில் குமார் செல்போனில் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மேடையின் ஓரத்திலிருந்தபடி தனது செல்போனில் ஆடிட்டோரியத்தை படம் பிடித்துக்கொண்டிருந்த குமார், செல்போனை பார்த்துக்கொண்டே நகர்ந்து திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தது தெரியவந்துள்ளது. மேலும், குமார் விழுந்த பகுதி மேடையிலிருந்து 12 அடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த குமாரை, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சி, வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐ.பி உதவி இயக்குநரான குமாருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.