நியூயார்க் :உக்ரைன் போர் உலக நாடுகளை பாதித்துள்ள போதிலும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளதாக ஐ.நா., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா., பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
உலக நாடுகள் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், உக்ரைன் போரால் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி, மறுமதிப்பீடு செய்யப்பட்டு, 4 சதவீதத்தில் இருந்து, 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
போர் காரணமாக உலகளவில் பணவீக்கம், கடந்த 10 ஆண்டு சராசரியை விட, இரு மடங்கு உயர்ந்து, 6.7 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தாண்டு தெற்காசிய பொருளாதார மதிப்பீடு 0.4 சதவீதம் குறைக்கப்பட்டு, 5.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்பிராந்தியத்தில் இந்திய பொருளாதாரம் 2021ல், 8.8 சதவீதம் வளர்ச்சி கண்டது.
இந்தாண்டில் பணவீக்க உயர்வு மற்றும் தொழில் துறை முழுமையாக மீட்சி அடையாத காரணத்தால், இந்திய பொருளாதார வளர்ச்சி 0.3 சதவீதம் குறைந்து, 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும், இந்தியா உலகளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடாக விளங்குகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement