75-வது கான் திரைப்பட விழா பிரான்ஸில் ஆரவாரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். படங்கள், பட அறிவிப்புகள் எனக் களைகட்டும் இந்தத் திருவிழாவின் ஹைலைட் தீபிகா படுகோன் நடுவராக பொறுப்பேற்று இருப்பது. தங்கப் பனை விருதுக்கான தேர்வு குழுவில் 8 நடுவர்களில் ஒருவராகப் பங்கேற்றிருக்கும் தீபிகா, இந்திய பெவிலியன் குறித்து அமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில், “ஒருநாள் இந்தியாவில் கான் விழா நடைபெறும்” எனத் தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதில் அவர் பேசியதாவது, “கான் விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொள்வது பெருமிதம் அளிப்பதாக இருக்கிறது. அதுவும் நடுவராக கபங்கேற்பது நான் எதிர்பாராத ஒன்று. 15 வருடத்திற்கு முன்பாக நான் இண்டஸ்ட்ரிக்கு வந்தபோது என்னுடைய திறமையை, கலையை யாரும் பெரிதாக எடுத்து கொண்டிருப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் இன்றைக்கு நடுவராக இருப்பது என்பது, படங்களை மதிப்பிடுவது தாண்டி, இந்த அனுபவம் நம்பமுடியாத பயணமாக இருந்திருக்கிறது. அதற்காக நான் நன்றியுடையவளாக இருக்கிறேன். இந்தியாவின் பெருமிதங்களை நான் நம்புகிறேன். இது வெறும் தொடக்கம் தான். ஏ.ஆர்.ரஹ்மான், சேகர் கபூர் போன்றவர்கள் தான் இந்தியாவை உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அதற்காக நான் நன்றி சொல்கிறேன். உங்களால்தான் எங்களை போன்றவர்கள் இன்று இங்கு இருக்கிறோம். “
மேலும், “75 வருட கான் திரைப்பட வரலாறை பார்த்தால் இந்தியர்களின் பங்கு படங்களாக, கலையாக நிறைய இருக்கிறது. இந்திய திறமைமீது நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஒருநாள் இந்தியா கான் விழாவில் பங்கேற்பது மாறி, இந்தியாவில் கான் விழா நடைபெறும்” என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். நடுவராக எப்படி படங்களை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது, “நாமெல்லாம் கிரியேட்டிவ் கலைஞர்கள். மதிப்பீடு செய்யவோ விமர்சனம் செய்யவோ ஆராயவோ யாருக்கும் தகுதி இருக்குமா எனத் தெரியவில்லை. நான் அனுபவிக்க மட்டும் செய்யவிருக்கிறேன். இது பெரிய பொறுப்பு. ஆனால் அந்த அழுத்தம் இல்லாது பார்வையாளர்களாக இதில் பங்கேற்க வேண்டும்” என்கிறார் தீபிகா.