ஸ்பெயின் நாட்டில், 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருக்கலைப்புக்கு முன் தங்கள் பெற்றோரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கும் சட்ட வரைவுக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருக்கலைப்புக்கு முன் தங்கள் பெற்றோரின் அனுமதி பெற்றிருத்தல் கட்டாயம் என, 2015-ம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த பழமைவாத மக்கள் கட்சியால் சட்டம் இயற்றப்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள ஸ்பானிஷ் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி, முந்தைய ஆட்சியின் கருக்கலைப்பு தொடர்பான அரசின் நடைமுறைகளை மீளாய்வு செய்து, பெண்களின் வயது 16-ஐ கடந்திருந்தால் கருக்கலைப்புக்கு பெற்றோரின் அனுமதி அவசியம் இல்லை, மற்றும் மாதவிடாய் நாள்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை என்ற கருதுகோள்களுடன் சட்ட முன்வரைவை தாக்கல் செய்திருந்தது. இதற்கு, ஸ்பெயின் அரசாங்கம் தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த சட்ட வரைவின் மூலம், ஸ்பெயின் நாட்டு பெண்கள் மாதவிடாய் நாள்களில் மூன்று நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெறுவர். மேலும், அதிகப்படியான உதிரப்போக்கு மற்றும் வலி ஆகிய காரணங்களால் இந்த மாதவிடாய் விடுமுறை 5 நாள்கள் வரை நீட்டிக்கப்படும். ஸ்பெயின் அரசு, இந்த விடுமுறை நாள்களுக்கு, நாட்டின் சமூக பாதுகாப்பு அமைப்பு பெண்களுக்கான ஊதியத்தை வழங்கும் எனவும் கூறியுள்ளது. இந்த சட்ட வரைவுக்கு ஸ்பெயின் அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கும் முதல் ஐரோப்ப நாடாகியுள்ளது.
ஸ்பெயின் அரசாங்கம், கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்கள் கரு வளர்ச்சியின் 14-வது வாரம் வரையில் அனுமதிக்கிறது. மேலும், வாடகை தாய் முறையை பெண்களுக்கு எதிரான வன்முறையின் வடிவமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளது. வாடகை தாய் முறைக்கு தடை தொடரும் நிலையில், மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. அதன் படி, வாடகை தாய் ஏஜென்சிகளின் விளம்பரங்களுக்கு முற்றிலும் தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் செய்தித் தொடர்பாளர் இசபெல் ரோட்ரிக்ஸ், ‘இந்த மசோதா ஜனநாயகத்திற்கான ஒரு புதிய படியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் சமத்துவ அமைச்சர் இரேனே மான்டேரோ, அரசு நிறுவனங்கள் பெண்களின் உடல்கள் தொடர்பான தடைகள், களங்கங்களை நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஸ்பெயினில் ஸ்பானிஷ் சோஷியலிஸ்ட் தொழிலாளர் கட்சி கூட்டணி ஆட்சியை அமைத்து நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அரசின் பல செயல்பாடுகள் பெண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதை உலக நாடுகள் உற்று கவனிப்பது குறிப்பிடத்தக்கது.