174 நெல் ரகங்கள், விவசாயிகளுக்கு 2 கிலோ விதைநெல்; மே 21-ம் தேதி தொடங்கும் தேசிய நெல் திருவிழா!

ஒவ்வோர் ஆண்டும் திருத்துறைப் பூண்டியில் நடைபெறும் நெல் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.வி. தனலட்சுமி திருமண அரங்கில் வருகிற மே 21, 22 , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தேசிய அளவிலான நெல் திருவிழா நடைபெறவுள்ளது. ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையம் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பாரம்பர்ய நெல் ரகங்களின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திப்பதால், மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளிலும் உறுதுணையாக உள்ளது. இதனை சாகுபடி செய்யும் விவசாயிகளும் கூடுதல் பலன் அடைகிறார்கள். வறட்சி மற்றும் வெள்ளம், பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றிகரமான விளைச்சல் கொடுப்பதால், விவசாயிகளுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கிறது.

நெல்

இயற்கை வேளாண்மையில் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுவதால், பெருமளவு செலவு குறைந்து, வழக்கத்தை விட கூடுதல் லாபம் கிடைக்கிறது. இந்நிலையில் பாரம்பர்ய நெல் ரகங்களை பரவலாக்கும் நோக்கத்தோடும், இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே செயல்படும் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையத்தினர், பாரம்பர்ய நெல் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் முன்னோடி இயற்கை விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், திரைப்படத்துறையினர், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாரம்பர்ய விதைகளை வழங்கி, விழாப் பேருரை ஆற்றுகிறார்.

சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன், மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் வேங்கடகிருஷ்ணா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காய்த்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட பலர் உரையாற்றுகிறார்கள்.

பாரம்பர்ய நெல் சாகுபடி

மாமருந்தாகும் பாரம்பர்ய நெல் ரகங்கள் என்ற தலைப்பில் இயற்கை மருத்துவர் கோ.சித்தர், இயற்கை விவசாயத்தில் எனது அனுபவங்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லதுரை, பூச்சிகளும் உழவர்களின் நண்பனே என்ற தலைப்பில் வேளாண் உதவி இயக்குநர் பூச்சி செல்வம் மற்றும் ஷோபனா குமாரி, வழக்கறிஞர் அசோகன் உள்ளிட்ட பலர் கருத்துரை யாற்றுகிறார்கள். திரைப்பட இயக்குநர்கள் சசிகுமார், இரா.சரவணன் மற்றும் திரைப்பட கலைஞர் ஆரி ஆகியோர், இயற்கை விவசாயத்தில் திரைத்துறையினர் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள். இரண்டு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், பாரம்பர்ய நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜூவ் மற்றும் இயற்கை விவசாயிகள் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

நெல்

விழா குறித்து ராஜீவிடம் பேசியபோது, “இவ்விழாவில் 174 வகையான பாரம்பர்ய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்படும். நம்மாழ்வார் விருது, நெல் ஜெயராமன் விருது, இளம் இயற்கை உழவர்கள் விருது, உழவர்களின் நண்பன் விருது வழங்கப்படும். பாரம்பர்ய நெல் சாகுபடியில் உண்மையான ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில். 2 கிலோ விதைநெல் வழங்கப்படும். இதனை சாகுபடி செய்பவர்கள், அடுத்த ஆண்டு நெல் திருவிழாவின் போது இதனை இரண்டு மடங்காக திரும்ப வழங்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.