60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க திட்டம்: மத்திய அரசு மீது இந்திய கம்யூ. தேசிய செயலர் டி.ராஜா குற்றச்சாட்டு

சென்னை: மத்திய பாஜக அரசு, 60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய அளவிலான 24-வதுமாநாடு, அக். 14 முதல் 18 வரை ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இன்றைய அரசியல் சூழலில் பாஜக, ஆர்எஸ்எஸ்-ன் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராகப் போராட்டங்களை அறிவிப்பதற்கும், அதற்கான மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைத் திரட்டுவதற்கும் இந்த மாநாடு அமையும்.

விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் கருத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காக மே 25 முதல் 31-ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி (புரட்சிகர சோசலிசக் கட்சி) ஆகிய 5 கட்சிகள் இணைந்து அறிவித்திருக்கிறோம்.

மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பாஜக அரசு தயாராக இல்லை. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை மூடி மறைக்க மதவெறி அரசியலை பின்பற்றுகிறார்கள். 60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது மக்களுக்கு, நாட்டுக்கு நல்லதல்ல.

பாஜக ஆட்சியை அகற்ற, இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட்டு போராட வேண்டும். அதற்காக பல்வேறு இயக்கங்களை முன்னெடுக்க உள்ளோம். இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.