சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஏழு பேரும் நிரபாதிகள் அல்ல குற்றவாளிகள்தான் என முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் தெரிவித்தார். அதே வேளையில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்று என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கும் தமிழக வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் கரும்புள்ளியை ஏற்படுத்திய நாள் 1991 மே 21ம் தேதி. அன்றைய தினத்தை எளிதில் கடந்துவிட முடியாது. மிஸ்டர் ஒயிட் என்று அன்போடு அழைக்கப்பட்ட இளந்தலைவர் ராஜீவ்காந்தி, சென்னை அருகே பூந்தமல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் சின்னப்பின்னாமாக்கப்பட்டார். அந்த பகுதியே ரத்தக்காடாக காட்சி அளித்தது. தமிழகத்தை தாய்வீடு போன்று கருதி வருகை தந்தை ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உண்டாக்கியது. அதைத்தொடர்ந்து அப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்த கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
இந்த படுபாதக கொலை சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு, சிலர் விடுதலையான நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன் உள்பட ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபிஐ அதிகாரி கார்த்திகேயன் தலைமையிலான குழுவினரே விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தமிழகஅரசு எடுத்த முயற்சி காரணமாக, பேரறிவாளனை நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். அதேசமயம் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரியான டி.ஆர்.கார்த்திகேயன் தெரிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஏழு பேரும் நிரபராதிகள் அல்ல, குற்றவாளிகள்தான் உறுதியுடன் கூறினார். ஆனால், பேரறிவாளன் விஷயம் வேறுவிதமாக சென்றுவிட்டது. இதனால், அவர் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்த்தது என்றார்.
மேலும் பேசியவர், இது ஒரு கொலை அல்லது முன்னாள் பிரதமரின் குடும்பம் பற்றியது மட்டுமல்ல. அன்றிரவு குண்டு வெடிப்பில் இறந்த ஒரு போலீஸ் சூப்பிரண்டு மற்றும் எட்டு போலீஸ்காரர்கள், ஒரு இளம் பெண் மற்றும் அவரது தாயார் உள்பட மற்றவர்கள் இறந்தனர். எஸ்.பி. இக்பால் தனது பிறந்தநாளில் இறந்து விட்டார். அவர்கள் குடும்பத்தினரின் நிலை என்ன. நாங்கள் சரியாகவே விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தோம். எங்கள் விசாரணையில் எந்த ஓட்டையும் இல்லை என்று தெரிவித்தார்.