Engineering: அடுத்த ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பு மிக்க துறைகள் என்னென்ன?

இன்ஜினீயரிங் துறைக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அதே நேரத்தில் அத்துறையில் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் உருவாகப்போகிறது போன்ற கேள்விகளோடு மனித வள மேம்பாட்டாளர் சுஜித் குமாரிடம் கல்வியாளர் ரமேஷ் பிரபா நிகழ்த்திய உரையாடல் இதோ…

Engineering

1. சில இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு கணிதம் தொடங்கி சில பாடங்களின் மதிப்பெண்கள் அவசியமில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

“இன்ஜினீயரிங் மாணவர்களை எடுத்துக்கொண்டால், அதில் அதிக பேர் அரியர் வைத்திருப்பது கணிதத்தில்தான். M1, M2, M3-ல் தான் பெரும்பாலான அரியர்கள் உள்ளன. முதல் செமஸ்டரில் அரியர் வைத்த M1, கடைசி செமஸ்டர் வரை நீள்கிறது. வேதியியல்கூட முதல் செமஸ்டரில் மட்டும் தான் படிப்பார்கள். அதற்கு மேல் பெரும்பாலும் படிக்க மாட்டார்கள். ஆனால் கணிதம் மற்றும் இயற்பியலில் அடிப்படை அறிவு இல்லையென்றால் கண்டிப்பாக இன்ஜினீயரிங் படிப்பு சிரமம் தான். இன்று கணிதம், இயற்பியல் படித்தவர்களுக்கே, பிரிட்ஜ் கோர்ஸ் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த முடிவை ஒரு மிகப்பெரிய தவறான முடிவாகத்தான் நான் பார்க்கிறேன்.”

2. இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் கலந்தாய்வில் சென்னையில் உள்ள கல்லூரிகளையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

Engineering

“அது மாணவர்களின் மனநிலையைப் பொருத்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவிட் காரணமாக சென்னை பக்கமே வராமல் எல்லாரும் வேறு நகரங்களில் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்தார்கள். தற்போது அந்த நிலை மீண்டும் பழையபடி மாறியுள்ளது. மீண்டும் சென்னையை நோக்கி மாணவர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். நாகர்கோவில், நாமக்கல், சேலம், ஈரோட்டில் கூட மிக நல்ல கல்லூரிகள் உள்ளன. மாணவர்கள் இடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கல்லூரி தேர்வு செய்யும்போதே முதலில் சென்னை இல்லையென்றால் கோயம்புத்தூர் என்று தான் தேர்வு செய்கிறார்கள். பெரிய நகரங்களில் படித்தால், வேலை கிடைத்துவிடும் என்று நினைக்கும் போக்கினை முதலில் மாற்ற வேண்டும். தற்போது HCL, IBM போன்ற நிறுவனங்கள் எல்லாம் Tier 2, Tier 3 நகரங்களை தான் குறி வைக்கின்றன.”

3. தற்போது இன்ஜினீயரிங்கில் ஐ.டி மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. ஐ.டி-யை தவிர்த்து வேறு என்னென்ன துறைகளில் வரும் காலங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும்?

ஆட்டோமொபைல் துறையை எடுத்துக்கொண்டால், அதில் கார் தயாரிப்பு , அதற்கான ஆராய்ச்சிகள், எலக்ட்ரிக் கார்கள் என்று ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள், மேற்படிப்பிற்கு ஆட்டோமொபைல் எடுத்தால், கண்டிப்பாக அவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் மகேந்திரா, ரெனால்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு ஆலை (R&D) தமிழகத்தில் தான் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் சிவில் இன்ஜினீயரிங்கில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்காகக் குறைந்துள்ளது. ஆனால் அங்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நாமே நிறைய ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கலாம். தொழிலதிபர் ஆகலாம், அரசாங்க கான்ட்ராக்ட் எடுக்கலாம். ஆர்வமும், தேடலும் இருந்தால் போதும் எந்த துறையானாலும் அதில் நிச்சயம் ஜொலிக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.