RCB v GT: `நாயகன் மீண்டும் வரார்'- அசத்தல் கோலியும், பிளேஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரும்!

ரசிகர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு சம்பவம் இன்று நடந்திருக்கிறது. விராட் கோலி ஆதிக்கமிக்க ஒரு இன்னிங்ஸை ஆடி முடித்திருக்கிறார். கோலியின் ஆட்டத்தால் பெங்களூரு ஒரு போட்டியை வென்றிருக்கிறது. குஜராத்திற்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு தங்களது பிளேஆஃப்ஸ் வாய்ப்பையும் இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

வென்றே ஆக வேண்டிய கட்டாயத்திலேயே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸை பெங்களூரு எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவே டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.

ஹர்திக் – டு ப்ளெஸ்ஸி

பெங்களூரு அணி பிளேஆஃப்ஸூக்குத் தகுதிப்பெற ஒரு வெற்றி மட்டும் போதாது, நல்ல ரன்ரேட்டும் தேவை என்ற சூழலே இருந்தது. ஏனெனில், இப்போது பிளேஆஃப்ஸ் ரேஸில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ராஜஸ்தான், டெல்லி, பெங்களூரு இந்த மூன்று அணிகளில் பெங்களூருதான் மகா மட்டமான ரன்ரேட்டை வைத்திருக்கிறது. அதளபாதாளத்தில் மைனஸிலேயே பெங்களூருவின் ரன்ரேட் கிடக்கிறது. ரன்ரேட்டை மனதில் வைத்து பார்த்தால் குஜராத்தை பெங்களூரு மிகக்குறைவான ஸ்கோருக்குள் முடக்கியிருக்க வேண்டும். ஆனால், பெங்களூரு அணியின் பௌலர்களால் அதை செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் மிகப்பெரிய ஸ்கோரையும் வாரி கொடுத்துவிடவில்லை. குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது.

ஹேசல்வுட்டின் பந்தில் ஒரே ரன்னில் சுப்மன் கில்லில் அவுட் ஆகினார். ஸ்லிப்பில் மேக்ஸ்வெல் ஒரு அபாரமான கேட்ச் மூலம் கில்லை வெளியேற்ற உதவியிருந்தார். சாஹா, மேத்யூ வேட் ஆகியோர் சில பெரிய ஷாட்களை ஆடி ரன்களை உயர்த்தினாலும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மேக்ஸ்வெல்லின் பந்தில் 16 ரன்களில் வேட் lbw ஆகினார். இந்த lbw கொஞ்சம் சர்ச்சை ஆகியிருந்தது. அம்பயர் அவுட் கொடுக்க, வேட் ரிவியூ எடுத்திருப்பார். ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் உரசவே இல்லை. இது அவுட்தான் என முடிவு வந்திருக்கும்.

ஆனால், ரீப்ளேவில் பார்க்கும்போது பந்து வேடின் பேட்டில் உரசி தன்னுடைய பாதையிலிருந்து கொஞ்சம் விலகி செல்வது போல தெரிந்தது. வேட் கடும் அதிருப்தியில் வெளியேறினார்.

பிறகு, பவுண்டரி லைனில் நின்று வேடும் மேக்ஸ்வெல்லும் இந்த அவுட் குறித்து விவாதித்துக் கொண்டு இருந்தனர். கமென்ட்ரி பாக்ஸிலும் வேடுக்கு ஆதரவான குரல்களே ஒலித்தன. நடுவர்களின் முடிவுகள் மற்றும் DRS சார்ந்து இந்த சீசனில் எக்கச்சக்க சர்ச்சைகள் உருவாக்கிவிட்டன. ஐ.பி.எல் நிர்வாகம் அடுத்த சீசனுக்கு முன்பாக இதுப்பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. கொஞ்ச நேரத்திலேயே சாஹாவும் 31 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதன்பிறகு, ஹர்திக் பாண்டியாவும் மில்லரும் கூட்டணி சேர்ந்தனர். க்ரீஸூக்குள் வந்த முதல் ஓவரிலேயே ஹர்திக் சிக்சர் அடித்திருந்தாலும் அந்த அதிரடியை அவர் தொடரவில்லை. கொஞ்சம் அடக்கித்தான் வாசித்தார். மில்லரும் பெரிதாக வேகம் எடுக்கவில்லை. 14 ஓவர்கள் வரை குஜராத் கொஞ்சம் மந்தமாகத்தான் முன்னேறிக் கொண்டிருந்தது. திடீரென மேக்ஸ்வெல் மற்றும் ஷபாஷ் அஹமது வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் மூன்று சிக்ஸர்களை மில்லர் பறக்கவிட்டார். ஆனால், கடைசி வரை நின்று அவரால் ஆட்டத்தை முடித்துக் கொடுக்க முடியவில்லை. ஹசரங்காவின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

Hardik Pandya

கடைசி 2 ஓவர்களில் ரஷீத் கான், ஹர்திக் பாண்டியா இருவருமே நன்றாக ஆடி 34 ரன்களைச் சேர்த்தனர். இந்த அதிரடி குஜராத்தின் ஸ்கோரை இன்னும் கொஞ்சம் கூட்டி 168 ஆக ஆக்கியது.

பெங்களூருவிற்கு டார்கெட் 169. பிளேஆஃப்ஸையும் ரன்ரேட்டையும் மனதில் வைத்து இந்த ஸ்கோரை பெங்களூரு கொஞ்சம் வேகமாக எட்ட முயற்சி செய்யுமோ எனத் தோன்றியது. ஆனால், பெங்களூரு had other ideas. அடி ஆழத்தில் மைனஸாக கிடக்கும் ரன்ரேட்டை உயர்த்துக்கிறேன் என அசாத்தியத்தை நிகழ்த்த முயன்று கோக்குமாக்காக எப்போதும்போல சொதப்புவதை பெங்களூரு விரும்பவில்லை. இந்த 169 ஸ்கோரை வேகமாக அடிக்க வேண்டுமெனில் ஒரு 14-15 ஓவர்களில் அடிக்க முயற்சி செய்யலாம். அதுதான் சாத்தியமான இலக்கு. ஆனால், அப்படிப் பரபரவென அடித்தாலும் பெங்களூருவின் ரன்ரேட் அப்படியே ப்ளஸ்ஸாக மாறிவிடப்போவதில்லை. அந்தளவுக்கு டேமேஜாக இருக்கிறது. இதனால் ரன்ரேட் என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் விருப்பப்படி பொறுப்பாக ஆடி போட்டியை வெல்ல வேண்டும் என்பதே பெங்களூருவின் இலக்காக இருந்தது. அதை சரியாகவும் செய்துவிட்டார்கள்.

விராட் கோலி – டூ ப்ளெஸ்ஸி பார்ட்னர்ஷிப்பே 115 ரன்களைச் சேர்த்துவிட்டது.

இங்கே ஹைலைட் கோலியின் ஆட்டம்தான். கடந்த சில போட்டிகளாக கோலியின் உடல் மொழியிலேயே ஒருவித அயர்ச்சியும் விரக்தியும் வெளிப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் போட்டியில் அதெல்லாம் ரொம்பவே குறைந்திருந்தன. உற்சாகமாகக் காணப்பட்டார். வழக்கமான துள்ளல் தென்பட்டது. முதல் பந்தையே மிட் ஆஃபில் தட்டிவிட்டு ஒரு குயிக் சிங்கிள் எடுத்தார். ஷமி வீசிய 3வது ஓவரில் அவரின் தலைக்கு மேலேயே ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஷாட் அவ்வளவு நேர்த்தியாக ஆதிக்கத்தோடு இருந்தது.

Kohli – DuPlessis

என விராட் கோலி பின்னர் Post Match Presentation-லும் பேசியிருந்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள். ரஷீத் கானை பவர்ப்ளேயில் அழைத்து வந்தார்கள். அவரின் முதல் ஓவரிலேயே ஷமிக்குக் கொடுத்ததை போல தலைக்கு மேலேயே ஷாட் ஆடி ஒரு பவுண்டரி எடுத்தார். பவர்ப்ளேக்குள்ளாகவே கோலிக்குள் இருந்த பீஸ்ட் வெளிவர தொடங்கிவிட்டது. ‘கோலி கொஞ்சம் தடுமாறுகிறார். ஆனால், அவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வெகு தொலைவில் இல்லை’ என பெங்களூருவின் பயிற்சியாளர் மைக் ஹெசன் அடிக்கடி கூறுவார். ஹெசன் கூறிய அந்த ஒரு போட்டி, அந்த ஒரு பெரிய இன்னிங்ஸ் இதுவாகத்தான் இருக்குமோ எனத் தோன்ற தொடங்கியது. கோலியும் தொடர்ந்து சிறப்பாகவே ஆடினார்.

Kohli

ரஷீத்கான் வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்து 33 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

அவுட்டாவதற்கு முன்பும் ரஷீத் கானின் தலைக்கு மேலேயே ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். அதே ஓவரில் இன்னொரு சிக்ஸருக்கு முயன்று ஸ்டம்பிங் ஆனார். 54 பந்துகளில் 73 ரன்களை அடித்திருந்தார். பௌலர்களின் மீது நன்றாக ஆதிக்கம் செலுத்தி அடிக்கப்பட்ட ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் இது. கோலிக்கு துணையாக நின்ற டு ப்ளெஸ்ஸியும் 44 ரன்களில் ரஷீத் கானின் பந்திலேயே கேட்ச் ஆனார். கடைசியில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 19வது ஓவரில் வெற்றி இலக்கை எட்ட வைத்தார். பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகன் விருது கோலிக்கே வழங்கப்பட்டது.

Kohli – DuPlessis

என கோலி பேசியிருந்தார்.

இந்த ஒரு இன்னிங்ஸை வைத்துக்கொண்டு கோலி மீண்டும் முழு ஃபார்மிற்கு வந்துவிட்டார் என கூற முடியாததுதான். ஆனால், அடுத்தடுத்து நல்ல இன்னிங்ஸ்களை ஆடுவார் என்பதற்கான அறிகுறியைக் கொடுத்து, நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் என்பதையும் மறுத்துவிட முடியாது.

பிளேஆஃப்ஸ் வாய்ப்பை பொறுத்தவரைக்கும், நாளை மறுநாள் நடைபெறும் டெல்லி vs மும்பை ஆட்டத்தில் டெல்லி தோற்றால் மட்டுமே பெங்களூருவிற்கு பிளேஆஃப்ஸ் வாய்ப்பு கிடைக்கும். ‘நான் ரோஹித்தை நம்புகிறேன். அவர் பெரிதாகச் செய்வார்’ என டு ப்ளெஸ்ஸி பேசியிருக்கிறார்.

செய்வீர்களா ரோஹித் தோழரே?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.