சித் ஸ்ரீராம் குரலில் திகட்ட திகட்ட காதல் பாடல்களை கேட்டவர்களுக்குத் தெரியும் அவரின் குரலின் தனித்துவம். காந்தக் குரலோனுக்கு இன்று பிறந்தநாள்.
கடல் படத்தில் வரும் `அடியே, என்னை நீ எங்க கூட்டிப் போற’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சித் பாடி 2013-ல் வெளியாகிறது.
அங்கிருந்து புஷ்பாவின் ஹிட் பாடலான ‘ஸ்ரீவள்ளி’ வரை அவர் பாடிய பாடல்களில் சித் ஸ்ரீராமை நம்மால் எளிதில் அடையாளம் காண முடியும்.
சென்னை பையனான சித் வளர்ந்தது எல்லாம் கலிபோர்னியா, அமெரிக்கா. அம்மா கர்னாடிக் இசை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்.
பெர்க்லி இசைக் கல்லூரியில் இசை உருவாக்கம் மற்றும் பொறியியலில் பட்டம் படித்துக் கொண்டிருந்தபோதே சென்னைக்கு மார்கழி உற்சவத்தில் பாட வந்து போகிறார் சித்.
`ஏன் என்னைப் பிரிந்தாய்’ என அவர் உருகும் போது நாமும் கரைகிறோம். `எனை மாற்றும் காதலே’ பாடலில் நாமும் துள்ளி குதிக்கத் தொடங்கிவிடுகிறோம்.
`கதைப்போமா’வில் பேசிப் பேசி களைப்படைந்த பிறகு ‘மறுவார்த்தை பேசாதே’ என அரவணைக்கிற மாயத்தை சித் ஸ்ரீராமின் பாடல்கள் நிகழ்த்துகின்றன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்த வருடம் முதல் ஹிந்தி பாடல்கள் என பான் இந்தியா பாடகராக வலம் வருகிறார் சித் ஸ்ரீராம்.
வார்த்தைகள் புரியவில்லையென்றாலும் `இன்கேம் இன்கேம் இன்கேம் காவலே’ பாடலுக்கோ ‘சமாஜ வர கமானா’ பாடலுக்கோ நாம் தலையசைக்க மறப்பதில்லை.
காதலின் எல்லா நிலைகளிலும் இவர் பாடிய ஒரு பாடலையாவது நாம் பொருத்தி பார்த்து கொள்ள முடியும்.
அப்துல் கலாமுக்கு சமர்ப்பிக்கப்பட்ட `கலாம் சலாம்’ பாடல், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என அவுட் ஆப் பாக்ஸ் பாடல்களும் இவரின் கலேக்ஷனில் உண்டு. எப்போதும் Vibe-ல் ரசிக்க வைக்கும் சித் ஸ்ரீராம்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!