TNPSC Group 2 Exam check list and Answering methods: தமிழகத்தில் குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான செக் லிஸ்ட் என்னென்ன மற்றும் தெரியாத கேள்விகளுக்கு எவ்வாறு விடையளிப்பது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தேர்வு நடைபெறும் நாளுக்கு முன் இரண்டு நாட்களுக்கு நல்ல தூக்கம் மற்றும் நல்ல உணவு அவசியம். தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து, தேர்வு எழுதும் வாய்ப்பை தவறவிட்டு விடாதீர்கள்.
அடுத்ததாக, ஹால் டிக்கெட், அடையாள அட்டை (ஆதார், பாஸ்போர்ட், பான் கார்டு போன்றவை), கருப்பு மை பேனா, தேவைப்பட்டால் முகக்கவசம் போன்ற தேவையான பொருட்களை தயார் செய்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பேனாக்களை தயாராக வைத்திருப்பது நல்லது. தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே செல்லுமாறு தயார்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வு மையத்தில் 9 மணிக்குப் பிறகு வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடையாது. எனவே அதற்கேற்றாற்போல் தயாராகிக் கொள்ளுங்கள். தேர்வு நாள் காலையில் காலை உணவை எடுக்க மறந்துவிடாதீர்கள்.
தெரியாத கேள்விகளுக்கு பதில் அளிப்பது எப்படி?
தேர்வுக்கு விடையளிப்பதை 3 பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். முதலில், நன்றாக விடைதெரிந்த, 100% உறுதியாக தெரிந்த வினாக்களுக்கு மட்டும் விடையளியுங்கள். அது 50 – 100 கேள்விகளாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்கு சந்தேகம் உள்ள கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டாம். வினாத்தாளை முழுமையாக முடித்த பின், மறுபடியும் பதிலளித்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக உங்களுக்கு சந்தேகம் உள்ள கேள்விகள் மற்றும் கணிதத்தில் ஸ்டெப்ஸ் எழுதி தீர்க்க கூடிய கேள்விகளுக்கு விடையளியுங்கள்.
இதையும் படியுங்கள்: TNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி?
அடுத்ததாக முழுமையாக விடை தெரியாத கேள்விகளை எடுத்து, எந்த பாடத்திலிருந்து அவை வந்துள்ளது என்பதை கண்டறியுங்கள். நாம் படித்ததில் இருந்து தான் நிச்சயம் வினாக்கள் பெரும்பாலும் கேட்கப்படும் நிலையில், இதுபோன்ற கேள்விகளை எடுத்து, அது தொடர்பாக என்ன படித்திருக்கிறோம் என்பதை நினைவுக்கு கொண்டு வாருங்கள். பின்னர் கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை படித்து விடையளியுங்கள்.
சுத்தமாகவே தெரியாத கேள்விகளுக்கு ஒரேமாதிரியாக விடையளித்தால் உங்களுக்கு ஒரு சில மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், தேர்வில் மைனஸ் மதிப்பெண்கள் இல்லை என்பதால், 200 கேள்விகளுக்கும் விடையளியுங்கள். தேர்வு எழுதும்போது, இந்தந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் வந்துள்ளதா என ஆராய்ச்சி செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். தேர்வு நேரத்தை முழுமையாக விடையளிக்க பயன்படுத்துங்கள். நல்ல மனநிலையோடு, தேர்வுக்குச் சென்று நல்லபடியாக தேர்வு எழுதுங்கள்.