உலகச் சந்தையில் கோதுமையின் விலை அதிகரித்த போதும், உணவுப் பாதுகாப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஐநா.பாதுகாப்பு சபையில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளுக்கு கடுமையான நேரங்களில் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் தலைமையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில், மோதல்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன், உக்ரைன் போர் காரணமாகவும் விலை உயர்வு காரணமாகவும் கோதுமைக்கு சர்வதேச சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியா போன்ற நாடுகளில் போதிய அளவு கோதுமை கையிருப்பு உள்ள நிலையிலும் விலை உயர்வு அதிகரித்திருப்பது, இந்தியா மற்றும் அண்டை நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதாக முரளிதரன் தெரிவித்தார்.
தனது தேவைகளுக்காகவும் தனது அண்டை நாடுகளின் பாதுகாப்புக்காகவும் இந்தியா கோதுமை ஏற்றுமதிக்குத் தடை போன்ற நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
உணவுக்கான தேவை உள்ள அரசுகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்குத் தேவையான கோதுமையை அளிக்க முடியும் என்றும் முரளிதரன் விவாதத்தில் எடுத்துரைத்தார்.
கோவிட் பேரிடர் காலத்திலும் அதன் பின்னரும் இந்தியா ஆப்கானிஸ்தான், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் அமைச்சர் தமது பேச்சில் குறிப்பிட்டார்.
உலகச் சந்தையில் கோதுமையின் விலை அதிகரித்த போதும், உணவுப் பாதுகாப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – இந்தியா திட்டவட்டம்