பேரறிவாளன் விடுதலை என்கிற செய்தி வந்த போது அரசியல், வழக்கு, நீதி எல்லாவற்றையும் தாண்டி அனைவருக்கும் நினைவுக்கு வந்தது ஒரு பெயர், அற்புதம்மாள்.
ரப்பர் செருப்பு, வாடிய முகம், தீராத நெஞ்சுரம், மனதின் ஒரு மூலையில் நம்பிக்கை என 31 ஆண்டுகளாக சிறைக்கும், நீதிமன்றத்துக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அலைந்த அற்புதம்மாளின் கால்கள் இனி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
`என் மகன் நிரபராதி’ இவை தான் அற்புதம்மாள் உச்சரித்த வார்த்தைகள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் `சிறு விசாரணை’ என அழைத்து செல்லப்பட்டவர் பேரறிவாளன்.
இரண்டு மகள்கள், ஒரு மகன், தனது கணவர் குயில்தாசன் உடன் வாழ்ந்து வந்த அற்புதம்மாளின் வாழ்க்கை, 1991-ல் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட நாளொன்றில் தலைகீழாக மாறியது.
பேரறிவாளனுக்கு வழங்கப்படவிருந்த மரண தண்டனை அற்புதம்மாளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. பல கட்டப் போராட்டங்கள், ஒரு உயிர் தியாகத்துக்கு பிறகு அந்த தண்டனை நீக்கப்பட்டது.
ஜோலார்பேட்டையில் உள்ளது அற்புதம்மாள் வீடு. அவர் தன் மகனை சந்திக்கவோ அரசு அதிகாரிகளைச் சந்திக்கவோ சென்னைக்கு வர வேண்டும். பல கி.மீ.க்கள் அவர் கால்கள் ஓடியிருக்கின்றன.
சி.பி.ஐ அதிகாரி தியாகராஜனின் மனமாற்றம் இந்த வழக்கில் முக்கியமான திருப்புமுனை. அதற்கு காரணமாக இருந்தது அற்புதம்மாளின் அயராத போராட்டம்.
2014-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய, தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கச் சென்றார் அற்புதம்மாள்.
அந்தச் சந்திப்புக்குப் பின்பு, “அழாதீங்கம்மா, அதான் உங்களுடைய மகன் விடுதலையாகித் திரும்ப வரப்போகிறாரே” என முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் கூறியதாக அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
2018-ல் எழுவரையும் விடுதலைச் செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்காக அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள்.
உடல்நலக் குறைபாடுகள் காரணமாக 2021-ல் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த அற்புதம்மாள் பரோல் நீட்டிக்க கோரிக்கை வைத்தார். `நிச்சயம் முடிந்ததைச் செய்வதாக’ முதல்வர் உறுதியளித்தார்.
பேரறிவாளன் வழக்கின் மீது கவனத்தையும் மக்களின் மனசாட்சியையும் கொண்டு சேர்க்க அற்புதம்மாள் போராட்டம் முக்கிய பங்காற்றியது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கால்கள் இப்போது ஓய்வெடுத்து கொள்ளலாம்.