அஸ்ஸாமில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. அதன் காரணமாக அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலத்தின் 27 மாவட்டங்களிலிருந்து 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருப்பதாகக் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹோஜாய் மாவட்டத்தின் லும்டிங் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சிபு மிஸ்ரா என்பவர், ஹோஜாய் பகுதியில் வெள்ள நிலைமையை ஆய்வு செய்ய சென்றார். அப்போது, அவர் தன் கால்கள் தண்ணீரில் படாமலிருக்க வேண்டும் என்பதற்காக, மீட்புப் படை வீரர் ஒருவரின் முதுகில் ஏறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, இது தொடர்பாக `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் பேசிய எம்.எல்.ஏ மிஸ்ரா, “எனக்கு உடல்நிலை சரியில்லை. எனக்குத் தெரிந்த பத்திரிகையாளர் ஒருவர் உதவி செய்ய முன்வந்தார். நான் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறேன். மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். ஊடகங்கள் இதை இவ்வளவு பெரிய பிரச்னையாக மாற்றும் என்பதை நான் உணரவில்லை. இப்படி நடந்தது என் துரதிஷ்டம்” என விளக்கமளித்திருக்கிறார்.
எம்.எல்.ஏ-வின் இந்தச்செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.