மும்பை: ஆப்ஸ் மூலம் ஆபாச படம் தயாரித்து வெளியிட்ட விவகாரம் தொடர்பாக ஷில்பா கணவர் ராஜ் குந்த்ரா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிந்துள்ளது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தயாரிப்பாளருமான ராஜ் குந்த்ரா (46) மற்றும் அவரது கூட்டாளி ரியான் தோர்பே ஆகியோர் மீது கடந்த 2019ம் ஆண்டு ‘ஹாட்ஷாட்ஸ்’ என்ற ஆப்ஸ் மூலம் ஆபாச படம் எடுத்து வெளியிட்ட விவகாரம் ெதாடர்பாக மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து ராஜ் குந்தரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மேற்கண்ட ஆபாசப் படங்கள் வழக்கில் நடந்த பணமோசடி குறித்து விசாரிப்பதற்காக, அமலாக்கத்துறை வழக்குபதிந்து தனது விசாரணையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே அவர்கள் மீது பதியப்பட்ட இரண்டு எப்ஐஆர் மற்றும் குற்றப்பத்திரிகைகளை ஆய்வு செய்த அமலாக்கத்துறை, தற்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆப்ஸ் மூலம் ஆபாச படங்கள் வெளியிடல், விற்பனை தொடர்பான வழக்கில் நிதிப் பரிமாற்றம் மற்றும் குற்றச் செயல்கள் குறித்து வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கி உள்ளோம். லண்டனில் இருந்து செயல்படும் கென்ரின் பிரைவேட் லிமிடெட் மூலம் ‘ஹாட் ஷாட்ஸ்’ ஆப்சை ராஜ் குந்த்ராவின் நிறுவனம் வாங்கியதை போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனனர். இந்த நிறுவனத்துடன் ராஜ் குந்த்ராவின் தொலைபேசியில் பேசிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில், அவர் 119 ஆபாச படங்களை 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பது குறித்து பேசியுள்ளார். அதனால், இவ்விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றன.