சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் நிறுத்தத்திற்கான நிலையம் காந்தி சிலை அருகே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும்போது , மகாத்மா காந்தி சிலை சேதமடைவதை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக சிலையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து அனுமதியளிக்க அரசு சார்பில் சென்னை மாநகராட்சிக்கு அறிவறுத்தல் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க… ‘ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி’ – வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
இந்நிலையில், மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தடையில்லா சான்றிதழை தற்போது சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. காந்தி சிலையை மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் முடியும் வரையில், மாற்று இடத்தில் வைக்க பொதுப்பணித்துறை பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக இடம் கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மெரினா கடற்கரை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையிலேயே ஒரு இடம் கண்டறிந்து அங்கு சிலையை வைக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் முழுமையாக முடிவுற்ற பின்னர், பழைய இடத்திலேயே மீண்டும் சிலை வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM