வீட்டில் தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு சலித்து விட்டதா? ஏதாவது வித்தியாசமாக சமைத்து சாப்பிட ஆசையா? கவலை வேண்டாம்! உங்கள் வீட்டில் இருக்கும் இட்லி மாவு போதும். சில நிமிடங்களில் அசத்தலான ஸ்வீட் ரெசிபி செய்து அசத்தலாம்.
இட்லி மாவில் ஸ்வீட் ரெசிபி எப்படி செய்வது?
முதலில் தேவையான அளவு இட்லி மாவு எடுத்துக் கொள்ளுங்கள், மாவு ரொம்ப கட்டியாகவும், தண்ணியாகவும் இருக்க கூடாது. ஏனெனில் மாவு தண்ணியாக இருந்தால் எண்ணெய் அதிகமாக பிடிக்கும், அதுவே கெட்டியாக இருந்தால் உள்ளே வேகாமல் இருக்கும். மாவில் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
இப்போது பாத்திரத்தில் தேவையான அளவு சர்க்கரை எடுத்து, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு செய்யவும். 3 குழிக் கரண்டி அளவு மாவுக்கு 100 கிராம் சர்க்கரை சரியாக இருக்கும். சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்தில் இருக்கும் போது அடுப்பை அணைக்கவும். அதிகமாக கொதித்து விட்டால், ஆறிய பிறகு சர்க்கரை பாகு இறுகிவிடும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும், அடுப்பை சிம்மில் வைத்து’ இட்லி மாவை ஒரு ஸ்பூனில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, மெதுவாக எண்ணெயில் விடவும். தேவைப்பட்டால் இட்லி மாவுடன் ஃபுட் கலரும் சேர்க்கலாம். ஆனால் ஃபுட் கலர் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதை தவிர்ப்பது நல்லது.
மிதமான தீயில் வைக்கவும். அதிக தீயில் வைத்தால் மேல்பகுதி மட்டும் வெந்து, உள்ளே வேகாமல் இருக்கும். இப்போது பொன்னிறமானதும் உருண்டைகளை எடுத்து, சர்க்கரை பாகுவில் சேர்க்கவும். ஒருவேளை பாகு ஆறிவிட்டால் லேசாக சூடு செய்யவும்.
தேவையென்றால் பாகுவில் சிறிது ஏலக்காய் தூள் சேர்க்கலாம். ஒரு மணி நேரம் பொறித்த உருண்டைகளை பாகுவில் ஊறவைக்கவும். இப்போது குலாப் ஜாமூனை போலவே சூப்பரான ஸ்வீட் சாப்பிட ரெடியாக இருக்கும்.
என்ன உங்க வீட்டுல மாவு இருக்கா! அப்போ இன்னைக்கே இந்த ஸ்வீட் செய்ஞ்சு எல்லாரையும் அசத்துங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“