75 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மாதவன், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியாவில் வெற்றியடைந்துள்ளதாகவும், இது புதிய இந்தியா என்றும் பாராட்டினார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் மாதவன், “பிரதமர் தனது பதவிக்காலத்தை தொடங்கியபோது, அவர் மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார். விவசாயிகளுக்கு ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தவோ, கையாளவோ தெரியாத ஒரு நாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு “பெரிய பேரழிவாக” இருக்கும் என்று உலகம் முதலில் சந்தேகித்ததாகவும், ஆனால் இரண்டு ஆண்டுகளில் முழுக் கதையும் மாறிவிட்டது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ” தற்போது சிறப்பாக மைக்ரோ-பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது. விவசாயிகளுக்கு பணம் கிடைத்ததா என்பதை அறிய தொலைபேசியைப் பயன்படுத்த கல்வி தேவையில்லை என்பதால் இது நடந்தது. இதுதான் புதிய இந்தியா” என்றும் தெரிவித்தார்
பாஜக தலைமையிலான மத்திய அரசு அடிக்கடி பயன்படுத்தும் ‘புதிய இந்தியா’ எனும் வார்த்தையை தற்போது நடிகர் மாதவன் உச்சரித்துள்ளார். மாதவனின் இந்த வீடியோவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் இந்திய திரைத்துறையினர் கலந்துகொண்டுள்ளனர்.