மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைனவ் சென்னை ஐஐடி வளாகத்தில் 5ஜி அலைவரிசையை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார்.
இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் 5ஜி அலைவரிசை சோதனை களத்தை சென்னை ஐஐடியில் தொடங்கி வைத்தார்
இந்த நிலையில் மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், சென்னை ஐஐடி வளாகத்தில் 5ஜி அலைவரிசையை வெற்றிகரமாக சோதனை செய்தார். தனது செல்போனில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து அவர் பரிசோதித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்னவ், “இது பிரதமரின் கனவு. அவர் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி, 5ஜி தொழில்நுட்பம் புழக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார். இது இந்திய உலகத்துக்காக உருவாக்கிய தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். இந்த தொழில்நுட்ப புரட்சிகளைக் கொண்டு நாம் உலகை வெல்ல வேண்டும்” என்றார்.
இந்தியா முழுவதும் 13 நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவை தொடங்கப்படும் என்று கூறியுள்ள இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பி.டி.வகேலா, அதன் பிறகு, படிப்படியாக நாடு முழுவதும் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் இந்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற இருக்கிறது. வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்கலாம்: ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM