சவூதி அரேபியாவின் மக்காவை தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச இஸ்லாமிய அரச சாரா, மதத் தலைவர்கள் மற்றும் மூத்த அறிஞர்களுக்கான அமைப்பான முஸ்லீம் வேர்ல்ட் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பொதுவான மதிப்புக்களை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மன்றத்தில் பங்கேற்பதற்காக, முஸ்லீம் உலக லீக்கின் பொதுச் செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான ஷேக் கலாநிதி. முஹமத் பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸாவின் அழைப்பின் பேரில், இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரும், ஜப்பானுக்கான பிரதம சங்க நாயக்கரும், ஜப்பானின் லங்காஜி விகாரையின் பிரதம குருவும், இந்தியாவின் சாஞ்சி சேத்தியகிரி விகாரையின் பிரதம பூசகருமான வணக்கத்துக்குரிய பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான குழுவினர் 2022 மே 9 முதல் 13 வரை சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்தனர்.
பௌத்த மதகுரு ஒருவர் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
மே 11 ஆம் திகதி ரியாத்தில் உள்ள புகழ்பெற்ற ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் கூடிய மேற்படி மன்றத்தில் வணக்கத்திற்குரிய பனகல உபதிஸ்ஸ தேரர் உரையாற்றினார். வணக்கத்திற்குரிய பனகல உபதிஸ்ஸ தேரர் தனது உரையில், புத்தபெருமானின் போதனைகளின் ஒற்றுமை மற்றும் இஸ்லாமிய நம்பிக்கையின் போதனைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து தனது கவனத்தை செலுத்தினார். ‘இஸ்லாம் மற்றும் பௌத்தம் எப்படியும் ஒப்பிடப்படுவதை நினைத்து பலர் அதிர்ச்சியடைவார்கள், இருப்பினும் நீங்கள் அவர்களின் போதனைகளையும், அமைதிக்கான அவர்களின் முயற்சிகளையும் உன்னிப்பாகக் கவனித்தால், அவர்கள் சந்தேகிப்பதை விட அது ஒத்ததாக இருக்கும்’ என அவர் குறிப்பிட்டார். புத்த பெருமானின் போதனைகளை மேலும் விரிவாகக் கூறிய அதி வணக்கத்துக்குரிய தேரர், ‘உலக அமைதிக்கு பௌத்த மத தத்துவம் மிகவும் முக்கியமானது. மந்திரங்களும் தத்துவங்களும் பௌத்தர்களுக்கு மட்டுமின்றி அனைவரின் வாழ்விலும் செல்லுபடியாவதுடன், பயனுள்ளவையாகும்’ எனக் குறிப்பிட்டார்.
தேரர் ரியாத்தில் தங்கியிருந்த காலத்தில், மத சகிப்புத்தன்மை மற்றும் புரிதல் குறித்து சில இலங்கை சமூக உறுப்பினர்களிடம் பேசினார். இலங்கை ஒரு நெருக்கடியான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கும் இவ்வேளையில் சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்களின் நேர்மறையான பங்களிப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இலங்கை கலாச்சார மன்றம் ரியாத்தில் உள்ள இலங்கை சமூகத்துடன் இணைந்து மே 13 ஆம் திகதி இலங்கை தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் கொண்டாட்டத்தில் தஹம் பாசல மாணவர்களின் போதி பூஜை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் அதி வணக்கத்திற்குரிய தேரர் கலந்து கொண்டார். இம்முறை வெசக் கொண்டாட்டங்களைக் குறைத்து, இலங்கையில் உள்ள தேவையுள்ள மக்களுக்காகக் கொண்டாட்டங்களுக்குத் தேவையான வளங்களைத் வழங்கியமைக்காக, ரியாத்தில் உள்ள இலங்கை சமூகத்தை அதி வணக்கத்திற்குரிய தேரர் பாராட்டினார்.
மே 12ஆந் திகதி தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தானத்தில் அவர் பங்கேற்றார்.
இந்து சமய திணைக்களத்தின் குருக்கள் இராமச்சந்திர ஐயர் மற்றும் வணக்கத்திற்குரிய கொஸ்வத்தே பாலித தேரர் ஆகியோரும் இம் மன்றத்தில் பங்குபற்றினர். இலங்கையிலிருந்து இந்து மதகுரு ஒருவர் சவுதி இராச்சியத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
2022 மே 17