அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இலங்கையர்கள் தமது கடன் அட்டைகள் மூலம் 5.5 பில்லியன் ரூபா பரிவர்த்தனை செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறித்த மூன்று மாதங்களில் மாத்திரம், மொத்த கடன் அட்டை இருப்பு 3.9 பில்லியன் ரூபாவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், 2022 மார்ச் மாத இறுதிக்குள் மொத்த கடன் அட்டை இருப்பு 138.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் ஒரு படியாக, இலங்கை மத்திய வங்கி தற்போது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.
மேலும், அனைத்து வணிக வங்கிகளும் கடன் அட்டைகளுக்கான அதிகபட்ச வட்டி விகித வரம்புகளை நீக்கிய பின்னர், கடன் அட்டை நிலுவைத் தொகையை 30 சதவீதமாக வேகமாக உயர்த்தி வருகின்றன.
இந்த அதிகரிப்பு அடுத்த மாதம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், சில வங்கிகள் புதிய கடன் அட்டைகளுக்கான கோரிக்கைகளை நிராகரித்து வருவதாகவும், அந்த கோரிக்கைகளை நிராகரிப்பதற்கான காரணங்களை கூட அறிவிக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.