இலங்கை புதிய பிரதமர் மறுப்பு| Dinamalar

கொழும்பு: ”கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது, பொதுச் சொத்துக்களை நாசப்படுத்துவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை,” என, இலங்கையின் புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, அவர் அலுவலகம் முன் முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கினர். இதனால் கொதித்தெழுந்த மக்கள் வன்முறையில் இறங்கினர். ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகளை தீ வைத்து எரித்தனர்; சொத்துக்களை சூறையாடினர்.
இதையடுத்து, பொதுச் சொத்துக்களை நாசம் செய்வோரை கண்டதும் சுட இலங்கை ராணுவம் உத்தரவிட்டது. இந்த வன்முறையில் எட்டு பேர் உயிரிழந்தனர். இது குறித்து, இலங்கை பார்லி.,யில் புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியதாவது: வன்முறையில் இறங்கிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி, ராணுவத்திற்கு எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. எனினும், வன்முறையில் ஈடுபடுவோர் மீது தேவைப்பட்டால், குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என கூறப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவ அமைச்சகமும், பிரதமரும் மாறுபட்ட தகவலை தந்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, ஏற்கனவே இரண்டு எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் சில எம்.பி.,க்களிடம் விசாரணை நடத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுதும் பல்கலை மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி அதிரடி
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி நேற்று சில அதிரடி முடிவுகளை அறிவித்தது. இதன்படி, இலங்கை மக்கள், 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவஞ்சலிகடந்த 2009 மே 18ல் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன், 13வது ஆண்டு நினைவு தினம் இலங்கையில் அனுசரிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் பூக்களைத் துாவியும் அஞ்சலி செலுத்தினர். இந்நாளை இலங்கை அரசு ராணுவத்தின் வெற்றித் திருநாளாக கொண்டாடும். இந்தாண்டு முதன் முறையாக கொழும்புவில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில், ஏராளமான சிங்களர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

அதிபர் அதிகாரம் குறைப்பு? இலங்கையில் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரத்தை குறைக்கும், அரசியல் சாசன 21வது சட்ட திருத்த மசோதாவை, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் பார்லி.,யில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.