கொழும்பு: இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு உணவுப் பொருட்களை சீனா வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டாலர் கையிருப்பில் இல்லாததால் நாடே பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் போராட்டம், கலவரத்தில் ஈடுபட்டதால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை வெளியுறவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சீனா உணவுப் பொருட்கள் வழங்கி உள்ளது. அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளது. இதனால் வெளியுறவுத் துறை அதிகாரிகள் சங்கத்தினர் கோபம் அடைந்துள்ளனர். இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் மூலம் காரியத்தை சாதிக்க சீனா நினைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகவலை கொழும்பு கெஸட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. “வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு மிக மோசமான லஞ்சத்தை சீன அரசு வழங்கி உள்ளது” என்று அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் நியூஸ் போர்ட் வெளியிட்ட செய்தியில், “உலகில் வேறு எந்த நாட்டிலும் உள்ள தூதரகம், இதுபோன்ற பொருட்களை வழங்கியதில்லை. அதிலும், ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க இலங்கை அரசியல்வாதிகளுடன் மிக நெருக்கமாக உள்ள சீனா இப்பொருட்களை வழங்கி உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை வெளியுறவுத் துறைஅமைச்சகத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை சீனா வழங்குவதற்கு, வெளியுறவுத் துறை செயலர் ஜெயந்த் கொலம்பேஜ் மற்றும் சீன – ஸ்ரீலங்கா நட்புறவு சங்கத்தினர் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, இலங்கையில் உள்ள சீன தூதரகத்திடம் இருந்து இலங்கை வெளியுறவுத் துறை பணமாக பெற்றுள்ளது. அந்தப் பணத்தில் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொள்ளும்படி சீனா கூறியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இலங்கை வெளியுறவுத் துறை செயலர் கொலம்பேஜ்ஜை, வெளியுறவுத் துறை அதிகாரிகள் சங்கத்தினர் சந்தித்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவிடம் இருந்து இப்படி பணம், பொருட்களை வாங்கியதால் இலங்கை வெளியுறவு சேவை மற்றும் வெளியுறவு விவகாரத்தில் பெரும் தர்மசங்கடமான நிலை உருவாகி உள்ளது என்று சங்கத்தினர் கூறியுள்ளனர்.