”உங்கள் வீட்டிற்குள் புதையல் இருக்கிறது"..சிக்கிய மந்திரவாதிகள்..வெளிவந்த பகீர் உண்மைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் பெண்ணின் வீட்டில் புதையல் எடுப்பதாக ரூ. 75 ஆயிரம் மோசடி செய்த  மந்திரவாதிகள் மூன்றுபேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பேதிரியன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி முத்துலட்சுமி. இவர் கூலி வேலைப் பார்த்து வாழ்வை நகர்த்தி வருகிறார்.கடந்த ஆண்டு இவரது மூத்த மகன் சிவகுமார் உயிரிழந்த சம்பவமும் அதன்பின் அவரது குடும்பத்தில் தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டதாலும் முத்துலட்சுமி மன விரக்தியில் இருந்துள்ளார்.
இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் அவரது வீட்டிற்கு குறி பார்ப்பது போல் வந்த மணி என்பவர், ”உங்கள் வீட்டிற்குள் புதையல் இருக்கிறது. அதனை எடுக்க 75 ஆயிரம் பணம் செலவு ஆகும். அவ்வாறு புதையலை எடுத்து விட்டால் உங்களது குடும்பப் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து விடும். வசதியாக வாழலாம்” என்று முத்துலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பிய முத்துலட்சுமியும் அவரது இளைய மகன் சுதாகரும் ஆங்காங்கே கடன்வாங்கி புதையல் எடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
image
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஒருநாள் இரவு மணி மற்றும் அவரது கூட்டாளிகளான அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் மருதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராசு ஆகிய மூவரும் முத்துலட்சுமியின் வீட்டிற்கு வந்து வீட்டின் பின்புறம் புதையல் எடுப்பதாக கூறி 5 அடி பள்ளம் தோண்டி உள்ளனர்.
அதன்பின் அவர்கள் பித்தளையில் வாங்கிவந்த நாக சிலை அம்மன் சிலை முதலை மற்றும் காமாட்சி அம்மன் சிலை காளி சிலை செம்பு நாணயங்கள் பித்தளை தகடு உள்ளிட்ட பூஜை பொருட்களை அந்த குழிக்குள் புதைத்துவிட்டு அதனை எடுப்பதுபோல் எடுத்து முத்துலட்சுமியிடம் கொடுத்துவிட்டு புதையல் கிடைத்து விட்டதாகவும் இதனை ஒரு மாத காலத்திற்கு மாட்டு சாணம் மற்றும் களிமண்ணிற்குள் மூடி வைக்கவேண்டும் என கூறிவிட்டு எழுபத்தி ஐயாயிரம் பணத்தையும் பெற்று சென்றுள்ளனர்.
ஒருமாத காலம் கழித்து அந்த சிலைகளை முத்துலட்சுமி சோதித்து பார்த்தபோது அது அத்தனையும் பித்தளை சிலைகள் என்பதும் வந்த மூன்று பேரும் போலி மந்திரவாதிகள் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து, முத்துலட்சுமி மண்டையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட  மந்திரவாதிகள் மணி, முருகேசன், ராசு ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
image
மேலும், அவர்களிடம் இருந்து 23 போலி பித்தளை சிலைகள் பூஜை செய்யும் மை உள்ளிட்ட பொருட்கள் 81 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், போலீசார் அந்த போலி மந்திரவாதிகளின் செல்போன்களை வாங்கிப் பார்த்தபோது பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதற்கான வீடியோக்களை மூவரும் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வீடியோக்களின் அடிப்படையில் வேறு எங்கெல்லாம் மோசடி செய்து உள்ளார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.