நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் 124-வது உதகை மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்
நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 124 -வது மலர்க் கண்காட்சி இன்று (மே 20) தொடங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக , திறப்பு விழாவுக்கு வந்த முதல்வரை அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் , கா.ராமச்சந்திரன் ,ஆட்சியர் அம்ரித் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், தாவரவியல் பூங்கா வளாகத்தின் இடதுபுற முகப்புப் பகுதியில், ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் அமைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடத்தின் மாதிரியை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, நுழைவாயில் அருகே 20 ஆயிரம் கார்னேசன் மலர்களால் அமைக்கப்பட்டு இருந்த ‘124 மலர் கண்காட்சி’ என்ற பெயர் பலகையை பார்வையிட்டார்.
தொடர்ந்து பூங்கா வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையை பார்வையிட்டார். அங்கு 4,500 பூந்தொட்டிகளால் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர், பூங்கா வளாகத்தில் ஆங்காங்கே மலர்களால் அமைக்கப்பட்டு இருந்த கட்டமைப்புகளை முதல்வர் ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
பின்னர் ,பூங்கா வளாகத்தில் வனத்துறை , பழங்குடியினர் நலத்துறை , வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் உரையாடினார். அதைத் தொடர்ந்து விழா நடக்கும் மேடைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அங்கு, சுற்றுலா மற்றும் கலைப்பண்பாட்டுத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கலைநிகழ்ச்சிகளை முதல்வர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், நீலகிரி எம்.பி. ஆ.ராசா , உதகை எம்.எம்.ஏ கணேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.