புதுடெல்லி: ஆறரை வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளிவந்துள்ள இந்திராணி முகர்ஜி, தனது மகள் ஷீனா போரா இன்னும் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் தனது முன்னாள் கணவர் மூலம் தனக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக 2015-ம் ஆண்டு மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பீட்டர் முகர்ஜிக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை, ஷீனா முறை தவறி காதலித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ்கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய் ஆகியோரும், பிறகு பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஜாமீன் கோரி இந்திராணி முகர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதன்படி, நேற்றுமுன்தினம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தனது வழக்கை பற்றி பேச மறுத்த முகர்ஜி, தனது மகள் ஷீனா போரா இன்னும் உயிருடன் இருப்பதாக மட்டும் தெரிவித்தார். “இந்த வழக்கைப் பற்றி நான் இப்போது பேச முடியாது. இப்போது வாழ்க்கையை நான் வேறு கோணத்தில் பார்க்க தொடங்கியிருக்கிறேன். இது ஒரு பயணம். இதில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்துள்ளேன். நிறையவே கற்றுக்கொண்டேன். குறிப்பாக சிறையில் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். சிறையில் அடைக்கப்பட்ட விஷயத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. என்னை காயப்படுத்திய அனைவரையும் நான் மன்னித்துவிட்டேன், அவ்வளவுதான்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது மகள் ஷீனா போரா உயிருடன் இருப்பதாகவும், தற்போது அவர் காஷ்மீரில் இருப்பதாகவும் இந்திராணி முகர்ஜி, கடந்த ஜனவரி மாதம் சிபிஐ இயக்குநருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.