புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தந்திரத்தின் மூலம் எலுமிச்சம் பழத்தை பறக்க வைத்து வீட்டில் புதையல் இருப்பதாக கூறி 80 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு , செப்பாலானான உலோகங்களை எடுத்துக் கொடுத்து ஏமாற்றிய முகமூடி சாமியார் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எலுமிச்சம் பழம் பறந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த மண்டையூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவரது மகன் சிவக்குமார் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் மனக்கவலையில் இருந்த முத்து லெட்சுமி விராலிமலை அருகே உள்ள மருதம்பட்டியைச் சேர்ந்த ராசு என்ற சாமியாடி இடம் குறிகேட்கச்சென்றுள்ளார்.
அப்போது சாமி ஆடிய ராசு, உங்கள் வீட்டில் புதையல் ஒன்று உள்ளது , அதனை கருப்பு ஒன்று காவல் காத்து வருகிறது அதற்கு குறுக்கே சென்றதால் உனது மகன் சிவக்குமார் உயிரிழந்து விட்டான், மீதம் உள்ளவர்கள் ஆரோக்கியமாகவும் , செல்வச்செழிபோடும் இருக்க வேண்டுமானால் உடனடியாக அந்த புதையலை வெளியே எடுக்க வேண்டும் என்று கூறியதோடு துவரங்குறிச்சி அருகே உள்ள பூசாரி மணி என்பவரை போய் சந்திக்குமாறு கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்த குடும்பத்தினர் பூசாரி மணியை போய் சந்தித்துள்ளனர். முத்துலெட்சுமியின் வீட்டுக்கு கூட்டாளியுடன் சென்ற அவர் உங்கள் வீட்டில் புதையல் உள்ளதா ? என்பதை நாம் முதலில் காத்து கருப்பு பூஜை செய்து அறிந்து கொள்வோம் என்று கூறி உள்ளார். தான் ஆடையின்றி நிர்வாண பூஜை செய்யபோவதாக கூறி வீட்டில் இருந்த முத்துலெட்சுமி மற்றும் அவரது உறவினர்களை வெளியே போகச்சொல்லி கதவை மூடிக் கொண்டதாக கூறப்படுகிறது.
சட்டையை மட்டும் கழட்டிக் கொண்டு முகமூடியுடன் வீட்டில் அமர்ந்து கொண்ட மணி, எலுமிச்சம்பழம் ஒன்றை வீட்டுக்குள் உருட்டி விளையண்டு அதனை அந்தரத்தில் பறக்கவைத்து அதனை கூட்டாளி மூலமாக வீடியோ எடுத்துள்ளார்
எலுமிச்சம் பழம் எப்படி பறந்தது ? என்ற வியப்பில் ஆழ்ந்த முத்துலெட்சுமி குடும்பத்தினரிடம் உங்கள் வீட்டில் புதையல் இருப்பது உறுதியாகி உள்ளது . உடனடியாக எடுக்காவிட்டால் புதையல் பூமிக்கு அடியில் சென்று விடும் என்று கூறி 5000 ரூபாயை முன்பணமாக வாங்கிக் கொண்டு, நாளை வந்து எடுத்து தருவதாக கூறிச்சென்றுள்ளார் மணி.
மறு நாள் வீட்டிற்கு வெளியே ஒரு இடத்தை அடையாளம் காண்பித்த பூசாரி மணி அண்ட் கோ அந்த இடத்தை தோண்டி உள்ளனர். அப்போது குழிக்குள் இருந்து பழைய காலத்து பாம்பு சிலை, இரும்பு தகடு, பழைய காலத்து காசு, போன்றவை புதையலாக கிடைத்ததாக கூறி முத்து லெட்சுமி குடும்பத்தினரிடம் கொடுத்து ஒரு மண்டலத்துக்கு இந்த புதையலை மாட்டுச்சாணத்திலும் , அடுத்த ஒரு மண்டலத்துக்கு இந்த புதையலை நெல் குதிலுக்குள்ளும் வைத்து பூஜித்தால் இந்த உலோகங்கள் அனைத்தும் சொக்கத்தங்கமாக மாறிவிடும் என்றும் தப்பித்தவறி கூட இந்த புதையல் ரகசியத்தை வெளியாட்களிடம் பகிரக்கூடாது அப்படி பகிர்ந்தால் புதையல் தங்கமாக மாறாது என்று கூறியதோடு, புதையலை எடுத்து கொடுத்தற்காக 75 ஆயிரம் ரூபாயையும், கூடுதலாக வழிச்செலவுக்கு என்று ஆயிரம் ரூபாயையும் பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்
கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடந்த இந்த புதையல் பூஜை ஒரு மோசடி வேலை என்பதை காத்திருந்து ஏமாந்த முத்து லெட்சுமி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துவரங்குறிச்சியை சேர்ந்த மணி,ராசு, முருகேசன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரித்த போது எலுமிச்சம் பழம் எப்படி அந்தரத்தில் பறந்தது ?என்பது அம்பலமானது.
எலுமிச்சை பழத்திற்குள் ஊசி மூலம் 5 மில்லி அளவுக்கு பாதரசத்தை ஏற்றி, அதனை குலுக்கி தரையில் விட்டால் தானாக அது நகரும் என்றும், மேலும் கண்ணுக்கு எளிதில் புலப்படாத மெல்லிய நூலில் ஊசியை கட்டி அதனை எலுமிச்சம் பழத்திற்குள் சொறுகி அதனை ஒரு கம்பில் கட்டி மேலே தூக்கி கீழே இறக்கி டெக்னிக்காக வீடியோ எடுத்துள்ளது தெரியவந்தது.
பறப்பது போன்று காட்சி அளித்த எலுமிச்சையை தனது கையில் படாத வகையில் லாவகமாக பொத்திக் காட்டி இவர்களை போல பலரை நம்ப வைத்து புதையல் இருப்பதாக கூறி இந்த கும்பல் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காத்து கருப்பை நம்பி சுற்றுவோர் ஊருக்குள் உள்ளவரை அதன் பெயரால் காதில் பூ சுற்றுவோரின் கைவரிசையும் தொடரவே செய்யும்..!