ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில், நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில், கடந்த 1988 ஆம் ஆண்டு, பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங் என்பவருடன் வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு குர்னாம் சிங்கை அவரது காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியதாகவும், இதில் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹரியானா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து சித்து கூறுகையில், ”சட்ட நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவேன்,” என்றார்.
இந்நிலையில் இன்று, நவ்ஜோத் சிங் சித்து சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் அமர்வு முன்பு ஆஜராகி கூறுகையில், சித்து சரணடைவார். அவருக்கு உடல்நலன் சார்ந்த பிரச்னை உள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும். இதனால், சரண் அடைவதற்கு அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் கூறுகையில், முறையாக மனு தாக்கல் செய்து, அதனை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். இதற்கிடையே நவ்ஜோத் சிங் சித்துவின் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.