முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து அவர் இன்று சரணடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் கடந்த 1988ஆம் ஆண்டு பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங் என்பவருடன் வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு குர்னாம் சிங்கை அவரது காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியதாகவும், இதில் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹரியானா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணையில் சித்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. நவ்ஜோத் சிங் மீதான குற்றம் விசாரணையில் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், நவ்ஜோத் சிங் சித்து நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சட்டத்தின் மாட்சிக்கு அடிபணிகிறேன்’ என்று சித்து குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நவ்ஜோத் சிங் சித்து இன்று சரணடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் தண்டனையை ரத்து செய்ய சித்து சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம்: `ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் சொன்னால் ரூ.50 லட்சம் சன்மானம்’- சிபிசிஐடி போஸ்டர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM