கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் உள்ள செயல்பாட்டில் இல்லாத தொழிற்சாலைக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப்பணிகள் தானே புயல் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இரும்பு பொருட்கள், காப்பர் கம்பிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அப்படியே வைக்கப்பட்டிருந்தது.
இதனை காவலாளிகள் இரவு, பகல் என்று கண்காணித்து வந்தனர். ஆனாலும் மர்ம கும்பல் யாருக்கும் தெரியாமல் தொழிற்சாலைக்குள் புகுந்து அடிக்கடி இரும்பு பொருட்களை திருடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் தொழிற்சாலையில் நெருப்பு மளமளவென கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
மேலும் தொழிற்சாலைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.