புதுடெல்லி:
250-க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு சம்பந்தமாக கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் முன்பு இன்று விசாரணை வந்தது.
அப்போது கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் , இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வாக்குமூலத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்றார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு ஆரம்பகட்டத்தில் இருப்பதால் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டிய எந்த முகாந்தரமும் இல்லை என்று வாதிட்டார்.
இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதி, நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்றுள்ள கார்த்தி சிதம்பரம் மே 24-ந்தேதி நாடு திரும்புவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும் கைது செய்யப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் இந்த காலம் மிகவும் குறைவு என்று குறிப்பிட்டார்.
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யும் நிலையில் குறைந்தபட்சம் 3 வேலை நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தர விடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும் கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பிய 16 மணிநேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.