அமராவதி: கால்நடைகளை ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் ஆந்திர அரசு புதிய திட்டத்தை நேற்று அமல்படுத்தியது. ‘டாக்டர். ஒய்.எஸ்.ஆர். கால்நடை ஆம்புலன்ஸ் சேவை’ என இத்திட்டத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை நேற்று காலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
மனிதர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இனி கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை இருக்கும். இதற்காக 1962 எனும் இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தால், ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும். இதனை குறிப்பாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதற்கட்டமாக தொகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்படும். படிப்படியாக மாநிலம் முழுவதும் அதிகரிக்கப்படும். தற்போது 175 தொகுதிகளுக்கு ரூ.143 கோடியில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் மேலும் 165 ஆம்புலன்ஸ்கள் இத்திட்டத்துடன் இணைக்கப்படும். இந்த வாகனங்களில் 15 ரக ரத்த பரிசோதனை மற்றும் இதர பரிசோதனை கருவிகள் பொருத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெகன் கூறினார்.