புதுடெல்லி: சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கில், கியான்வாபியில் மே 6, 7 -ல் நடத்தப்பட்ட களஆய்வின் அறிக்கையை முன்னாள் ஆணையர் அஜய் குமார் மிஸ்ரா சமர்ப்பித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்கார கவுரி அம்மனை தினமும் தரிசிப்பது தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. இதை விசாரிக்கும் வாரணாசியின் சிவில் நீதிமன்றம், கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதிக்குள் களஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது. இதன் கடைசிநாளில், மசூதியின் ஒசுகானா நடுவே சிவலிங்கம் இருப்பதாக, மசூதியின் ஒரு பகுதிக்கு நீதிமன்றம் சீல் வைத்துள்ளது. களஆய்வை தலைமை ஏற்று நடத்திய ஆணையர் அஜய் குமார் மிஸ்ரா மீதான புகாரினால் அவர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டார்.
எனினும், அஜய் மிஸ்ரா, நேற்று முன்தினம் மாலை திடீரென 70 பக்க அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார். முதல் கட்டமாக மே 6, 7-ம் தேதிகளில் நடைபெற்ற கள ஆய்வின் அறிக்கையை வாரணாசியின் சிவில் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
முன்னதாக, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கையின் சில தகவல்கள் மீண்டும் வெளியில் கசிந்துள்ளன. இதன்படி, மசூதியின் அடித்தளத்தில் கிடக்கும் இடிபாடுகளில் நான்கு இந்து கடவுள், ஐந்து தலை நாகம் மற்றும் தாமரை சிற்பங்களும் காவி நிறத்தில் காணப்பட்டுள்ளன என்றும், அதன் சுவர்களில் இந்து மதச் சின்னங்களின் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரண்டாம் கட்டமாக மே 14 முதல் 16 வரை 3 தினங்களின் கள ஆய்வின் அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) உதவி ஆணையர்களில் ஒருவரான விஷால் சிங் சமர்ப்பிக்க உள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வாரணாசி சிவில் நீதிமன்றத்தின் கள ஆய்வு உத்தரவிற்கு தடை கேட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியினர், ஒசுகானாவின் சுற்றுச்சுவரை இடிக்க முயற்சிகள் நடப்பதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினர். இந்துக்கள் தரப்பில் வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயினுக்கு உடல்நிலை சரியில்லாதமையால், வழக்கை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, கியான்வாபி மீது நாளை மாலை வரை 2 தினங்களுக்கு எந்த புதிய உத்தரவுகளையும் வாரணாசி நீதிமன்றம் பிறப்பிக்க கூடாது என்று உச்ச நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது. தொடர்ந்து, மசூதி தரப்பில் கள ஆய்விற்கு தடை கேட்ட வழக்கு வெள்ளிக்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, நடவடிக்கை சரியில்லை என்ற காரணத்திற்காக வாரணாசி நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட ஆணையர் அஜய் மிஸ்ரா சட்டப்படி அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என மசூதி தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். ஒசுகானாவின் நடுவே இருப்பது சிவலிங்கம் அல்ல, நீரூற்று தான் என்பதை நிபுணர்களை வைத்து நிரூபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.