புதுடெல்லி: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 வளரும் நாடுகள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்பை உருவாக்கின. இதன் உறுப்பினர் நாடுகளின் நிதி தேவைகளுக்காவும் முன்னேற்றத்திற்காகவும் கடந்த 2015ம் ஆண்டில் பிரிக்ஸ் வங்கி தொடங்கப்பட்டது. அதுவே தற்போது புதிய வளர்ச்சி வங்கி என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிய வளர்ச்சி வங்கியின் கிளை குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி டெக்-சிட்டியில் அமைக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் மார்கோஸ் டிராய்ஜோ தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “ கடன் வாங்குபவர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான புதிய வளர்ச்சி வங்கியின் தொடர்பை மேம்படுத்துவதில் இதன் இந்திய பிராந்திய அலுவலகம் முக்கியப் பங்காற்றுகிறது,’’ என்று கூறினார்.