கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ – பாராட்டிய பிரபலங்கள்!

கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம் நேற்று திரையிடப்பட்ட நிலையில், படம் எவ்வாறு இருக்கிறது என்று தங்களது சமூகவலைத்தள பக்கங்களில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் தெரிவித்துள்ளனர்.

கிரையோஜனிக் ராக்கெட் தொழில் நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ல் கேரள காவல்துறையால் கைதாகி, பின்னர் நிரபராதி என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படம் உருவாகியுள்ளது. இதில் நம்பி நாரயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாதவன், இந்தப் படத்தை இயக்கியுள்ளதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தமிழில் சூர்யா, இந்தியில் ஷாருக்கான் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் வருகிறார்கள். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட 5 மொழிகளில் ஜூலை 1-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்வதேச திரைப் பிரபலங்கள் முன்னிலையில் நேற்று திரையிடப்பட்டது. இதையொட்டி நடிகர் மாதவன் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

image

இந்நிலையில், தனது ‘லி மஸ்க்’ என்ற குறும்படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்படுவதையொட்டி அங்கு சென்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மாதவனின் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தை பார்த்து ரசித்துவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதில், கேன்ஸ் விழாவில் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தினை இப்போதுதான் பார்த்தேன். இந்திய சினிமாவிற்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ள மாதவனுக்கு தலைவணங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

image

இதேபோல், பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான சேகர் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம் எவ்வளவு அழகாக இருக்கிறது. கேன்ஸ் விழாவில் நேற்றிரவு திரையிடப்பட்ட இந்தப் படத்தை, ஆர் மாதவன் எவ்வளவு அழகாக இயக்கி, நடித்துள்ளார். மேலும் பார்வையாளர்களில் ஒருவராக நம்பி நாரயணனே இருந்தது இதயத்தை உலுக்கியது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

image

இந்தியா சார்பில் கலந்துகொண்டுள்ள விளையாட்டு, இளைஞர்நலன், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவிக்கையில், “ ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படம் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்யும். நிச்சயம் உலகம் பார்க்கவேண்டிய கதை. கதையின் ஆன்மாவைப் படம்பிடித்து, அதை உலகத்துடன் பகிர்ந்து கொண்டதற்கு நடிகர் மாதவனுக்கு பாராட்டுக்கள்” இவ்வாறு மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.