இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தையும், புதிய வெப்சீரிசையும் இயக்க உள்ளார். இவரின் நீலம் புரடொக்ஷன்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ள இந்தப் படம், பொன்னி பகுதியில், சோழன் என்ற கிராமப்புற கேங்ஸ்டர், நவீன ராபின் ஹூட்டாக மக்களுக்கு காட்சியளிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
தன இன மக்களுக்காக போராடும் நவீன ராபின் ஹுட்டான சோழன், அடக்குமுறைகளுக்கு எதிராக நின்று, அதற்கு காரணமானவர்களைக் கொல்கிறான். பின்னர் எதிரிகளிடமிருந்து தப்பிக்க சிறைக்கு செல்லும் அவனை, எதிரிகளுடன் சேர்ந்து சிறை அதிகாரிகளே சோழனை கொலை செய்ய துடிக்கின்றனர். சிறை வாழ்க்கையில் நடக்கும் கொடூரமான சம்பவம் மற்றும் எதிரிகளிடமிருந்து சோழன் எப்படி தப்பிக்கிறான் என்பதே படத்தின் கதை.
இந்த வருட இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்கப்பட உள்ளது. அடுத்த வருடம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பிரான்சில் நடைபெற்று வரும் 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியூஷ் சிங், அஸ்வினி சவுத்ரி மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டானர். அதில் வேட்டையாடும் புலி ஒன்று ஆக்ரோஷமாக காட்டுக்குள் உலவுவதுபோல் கையால் வரையப்பட்ட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.