ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குவதற்கு சர்வதேச தலையீடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் பதவியிலிருந்து விலகியதால் எந்தப் பலனும் ஏற்படவில்லையெனவும், ஜனாதிபதியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கவும் முடிவுக்கு கொண்டுவரவும் ஒரு முடிவை எடுக்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச தலையீடு தேவைப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டும் நோக்கில் ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்மார்கள், குழந்தைகள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் காலி முகத்திடலில் இருந்த அனைவரையும் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் வேண்டுமென்றே தாக்கினர்.
மே 9ம் திகதி கலவரத்தில் பங்கு பெற்றவர்கள் தற்போதைய ஜனாதிபதியால் அடையாளம் காணப்படுவார்கள் எனவும், அவர்கள் விரைவில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடத்தல் மற்றும் கொலைகளில் தலைசிறந்தவர். கடந்த காலங்களிலும் அவர் இதையே செய்துள்ளார், இதனால் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம்.
இதனையே நாட்டு மக்களுக்கும் அவர் செய்வார். இந்நிலையில், பெரிய அளவில் எதுவும் நடக்கும் முன் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.