நடிகர் எஸ்.வி.சேகர், தற்போது தனது காரில் இருந்த பா.ஜ.க கொடியை அகற்றிவிட்டார். ஆனால், காரின் உள்ளே இருக்கும் மோடி படம் அப்படியேதான் இருக்கிறது. இதுபற்றி அவரின் நண்பர்களிடம் விசாரித்தால், ”தமிழக பா.ஜ.க.வின் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்றும், விரைவில் கட்சியில் இருந்து அவர் விலகிவிடுவார்.” என்றும் சொல்கிறார்கள்.
கான் திரைப்பட விழாவில் கமல், ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், பா.ரஞ்சித், பூஜா ஹெக்டே, தமன்னா என திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.நடிகைகளில் நயன்தாராவும் இந்த முறை பங்கேற்பதாக முன்பு சொல்லபட்டது. ஆனால், வருகிற ஜூன் 9-ம் தேதி அவரது திருமணம் என்பதால் கான் விழாவை கேன்சல் செய்துவிட்டாராம். இப்போது விக்னேஷ் சிவனோடு, மும்முரமாக கல்யாண வேலைகளை கவனித்து வருகிறார். முன்னதாக தன் ஜாதக பரிகாரமாக முருகனின் அறுபடை வீடுகளை சுற்றி வரவும் திட்டமிட்டிருக்கிறாராம். திருமணத்தை திருமலையில் முடித்துக்கொண்ட பிறகு சென்னையில் வரவேற்பு வைக்கலாமா, வேண்டாமா என்ற இரு மனநிலையில் தம்பதியினர் இருக்கிறார்கள். அதுவும் திருமணத்திற்கு முன்பாக முடிவாகி விடும்.
‘விக்ரம்’ படப்பிடிப்புக்கு இடையே ஒருநாள் கமலும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் சந்தித்துக்கொண்டனர். அவர்களின் பேச்சு ‘தசவதாரம்’ வெளியாகி 12 ஆண்டுகள் ஆனது பற்றித் திரும்பியது. ”கமல் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர் No Pain No Gain என்பது அவரது பாலிசி. ‘தசாவதாரம்’ படத்துக்கும் அப்படித்தான் அவர் உழைத்தார். ‘படம் வெளியாகி 12 வருஷம் ஆச்சா?’ என்று கமல் என்னிடம் ஆச்சரியத்துடன் கேட்டார். அதுகுறித்து இரண்டு மணிநேரம் பேசினார். சில வருடங்களாகவே கமலையும் என்னையும் பார்த்து ‘தசாவதாரம் 2’ எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் அது போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே பார்ட் 2 வுக்கு வாய்ப்பே இல்லை.” என்கிறார் ஆணித்தரமாக!
‘மௌனம் பேசியதே’வை கணக்கில் வைத்தால் சினிமாவில் 20 ஆண்டுகள் கொண்டாடுகிறார் த்ரிஷா. இதற்காக அவரின் நண்பர்களும், சக நடிகர்களும் இணைந்து பாராட்டு விழா ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா முதற்கொண்டு பலரும் ஒத்துழைப்பு தருவதாக சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80-களின் கதாநாயக – நாயகிகளின் மீட்டிங் மாதிரி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறார்கள். இதை சென்னையில் வைத்துக்கொள்வதா அல்லது கோவா பக்கமாக நகர்த்திவிடலாமா எனத் தீவிரமாக ஆலோசனை செய்துகொண்டு இருக்கிறார்கள். த்ரிஷாவின் சக தோழிகள் தவிர நடிகைகளும் சில முக்கியமான கதாநாயகர்களும் இதில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
நடிகர் விக்ரம் ‘கோப்ரா’வை முடித்துவிட்டு, இப்போது ரிலாக்ஸ் ட்ரிப்பில் இருக்கிறார் என முன்பே சொல்லியிருந்தோம். ‘கோப்ரா’வில் அஜய் ஞானமுத்துவின் ஒர்க்கிங் ஸ்டைல் விக்ரமை கவர்ந்துவிட மீண்டும் அவருடன் கைகோக்கிறார். அனேகமாக பா.ரஞ்சித்தின் படத்தை முடித்துவிட்டு விக்ரம் மீண்டும் அஜய்யுடன் இணைவார் என்கிறார்கள்.
கொஞ்ச காலம் முன்பு லாபத்தில் நஷ்டமாக சிவகார்த்திகேயனுக்கு இருந்தது. இப்போது ‘டான்’ படத்திற்குப் பிறகு அந்த நிலைமை முற்றிலும் சீராகிவிட்டது. சோனி முதன்முதலில் தயாரிக்கும் படத்தில் அவர் இடம் பெற்றுவிட்டார். அவரே எதிர்பார்க்காத தொகையை அட்வான்ஸாகக் கொடுத்ததால் சிவகார்த்திகேயன் ஆச்சர்யப்பட்டார். சாய் பல்லவியோடு அவருக்கு ஹெவி மூவ்மெண்ட்ஸ் ஸ்டெப் இருப்பதால் அவர் டான்ஸ் பயிற்சி பெற்று வருகிறார்.
பாடகர் எஸ்.பி.பி.யின் பிறந்தநாள் ஜூன் 4-ம் தேதி. அப்பாவின் நினைவாக இசை நிகழ்ச்சி ஒன்றை அன்று சென்னையில் நடத்துகிறார். இதற்கிடையே எஸ்.பி.பி.யின் மணி மண்டப வேலைகள் இன்னும் நிறைவு பெறவில்லையாம். செப்டம்பர் 25-ம் தேதி எஸ்.பி.பி.யின் நினைவு தினத்திற்கு முன்பாக நிறைவு பெற்றுவிடும் என்கிறார்கள்.