ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினரும், துப்பாக்கி சூட்டில் பலியான, காயமடைந்தவர்களின் குடும்பத்தினரும் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும்போது, “நல்ல தண்ணீர், காற்று கேட்டு போராடியவர்களை காக்கை குருவியை சுடுவது போல சுட்டுக்கொன்றனர்.
இன்றளவும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குகிறது. அது மட்டுமில்லாமல், ஆலை நிர்வாகம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆன நிலையில் சி.பி.ஐ தனது 3-வது இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் குற்றத்தில் ஈடுபட்ட ஒரு காவல்துறையினர் மீது கூட வழக்கு பதியவில்லை. குற்றவாளிகளை சாட்சிகளாகவும், சாட்சிகளை குற்றவாளிகளாகவும் காட்டியுள்ளனர்.
சி.பி.ஐ-யின் இறுதி அறிக்கை மோசமானது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறை, அரசுக்கு ஆதரவாகவும் அறிக்கை உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், தூத்துக்குடி மக்களுக்கும் சி.பி.ஐ அநீதி இழைத்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை நீதிமன்ற மேற்பார்வையில் மறு விசாரணை நடத்தவேண்டும்.
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்து, சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.
ஆலையை திறக்கும் நோக்கில்தான் ரஜினியை விட்டு பேச வைத்தனர். ஆலைக்கு ஆதரவாக பாஜக மட்டுமே செயல்பட்டது. மீண்டும் ஆலையை திறப்பேன் என்று தூத்துக்குடி மக்களை அனில் அகர்வால் மிரட்டிவருகிறார். சி.பி.ஐ-யை பின்னாலிருந்து இயக்குகிறார்” என்றார்.
ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அரி ராகவன் பேசுகையில், “சி.பி.ஐ-யின் விசாரணையில் நீதிமன்றத்தில் சமர்பித்த இறுதி குற்ற அறிக்கையில் நியாயம் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால் மோசடி செய்துவிட்டது. அதனால் அதை நிராகரிக்கிறோம். இதனை கண்டித்து துப்பாக்கி சூட்டின் நினைவு நாளான வரும் 22-ம் தேதி தூத்துக்குடியில் போராட்டம் நடத்தவுள்ளோம்” என்றார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பேசும்போது, “எந்த பாவமும் அறியாத எங்கள் உறவுகள் கொல்லப்பட காரணமான காவல்துறை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது மட்டுமே எங்களுக்கு சிறிது ஆறுதலைத் தரும். சி.பி.ஐ நியாயமான விசாரணை நடத்தும் என்று நம்பியிருந்தோம். ஆனால், இப்படியொரு மோசடியான குற்ற பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என்று நினைக்கவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது எங்களுக்கு ஆதரவாக பேசிய தி.மு.க தலைவர்கள் தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் நியாயமான விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என்றனர்.