பொம்மிடியில் தினசரி சேமிப்பு திட்டம் நடத்தி பல கோடி ரூபாயை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில், பணத்தை இழந்தவர்கள் எம்எல்ஏ உடன் வந்து மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் அமுதசுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் எனும் பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக தனியார் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வந்தது. இந்த வங்கியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக இணைந்து தினமும் பணம் செலுத்தி வந்துள்ளனர். மேலும் கூட்டுறவு சங்கத்தில் தினசரி சேமிப்பு திட்டம், வாராந்திர சேமிப்பு திட்டம், மாதாந்திர சேமிப்பு திட்டம், நிரந்தர இட்டு வைப்பு திட்டம் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு 90 நாட்களுக்கு பணம் கட்டிய பிறகு கடன் வழங்கப்பட்டது. இதனை நம்பி நாள்தோறும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் கட்டி வந்துள்ளனர். தொடர்ந்து 360 நாட்கள் கட்டிய பிறகு தொகைக்கேற்ப 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூடுதல் தொகை சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
பொம்மிடியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வாடிக்கையாளருக்கு பணம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனை நம்பி பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், வேப்பிலைப்பட்டி, பையர்நத்தம் உள்ளிட்ட, 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வணிகர்கள் தினந்தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பத்து நாட்களாக தனியார் கூட்டுறவு கடன் சங்கம் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர்கள், பணம் வசூல் செய்த ஊழியர்களை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் போன் எடுக்கவில்லை.
இதனால அச்சமடைந்து பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால், இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையில் புகார் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி… பொம்மிடியில் தினசரி சேமிப்பு திட்டம் நடத்தி தனியார் வங்கியில், தினசரி கூலி தொழில் செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள் என 600 பேர் பணம் செலுத்தி வந்துள்ளனர்.
இந்த நிறுவனம் மக்களுக்கு பணத்தை திருப்பிப் தராமல் வங்கி கிளையை மூடிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் ரூ.5.40 கோடி ரூபாய் பணத்தை மக்கள் ஏமார்ந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை உடனடியாக மீட்டு தரவேண்டும். தினசரி சேமிப்பு திட்டம் நடத்தி பொதுமக்களின் பணத்தை ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம்.]
மேலும் இதுபோன்ற உரிய அனுமதியில்லாமல் நடைபெறும் நிறுவனங்களை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவிந்தசாமி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM