ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் 8 ஆண்டுகள், நாட்டின் சீரான வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த எட்டு ஆண்டுகளில் பாஜக அரசு பூர்த்தி செய்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டிய நேரம் இது.
உலகமே இன்று இந்தியாவை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. அதேபோல் நாட்டு மக்கள் பா.ஜ.க.வை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். கடந்த சில நாள்களாகவே மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது.தேசிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து உள்ளோம் ” என்றார்.
இந்தியாவில் கடந்த சில நாள்களாகவே இந்தித் திணிப்பு பற்றிய சர்ச்சை நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.