சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றுவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
இது மக்களை ஏமாற்றும் செயல். வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், அதற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது ஒரு ஆட்சிக்கு அழகல்ல. பணி நிரந்தரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஊழியர்களை தனியார் துறை ஊழியர்களாக மாற்றி இருக்கிறது தி.மு.க. அரசு. அரசே ஏமாற்றும் பணியில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தேர்தல் வாக்குறுதிப்படி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், தனியார் நிறுவன ஊழியர்களாக ஆக்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்குரிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.