டாக்டர் ராஜசேகர் குடும்பத்திற்கு இன்று டபுள் ரிலீஸ்
அரசியலைப் போல சினிமாவிலும் வாரிசுகள் அதிகம். அதிலும் குறிப்பாக தெலுங்குத் திரையுலகத்தில் ஒவ்வொரு பிரபலத்தின் குடும்பத்திலும் வாரிசுகள் சினிமாவில் உள்ளனர். அந்த விதத்தில் உள்ள ஒரு குடும்பம் டாக்டர் ராஜசேகர் குடும்பம்.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி தெலுங்கில் ஹீரோவாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் டாக்டர் ராஜசேகர். அவருடைய மனைவி ஜீவிதா நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் பல திறமைகளை உள்ளடக்கியவர். அவர்களுக்கு ஷிவானி ராஜசேகர், ஷிவாத்மிகா ராஜசேகர் என இரண்டு மகள்கள். இருவருமே தமிழ், தெலுங்கில் நடித்து வருகின்றனர்.
இன்று இவர்களது குடும்பத்தினருக்கு தமிழ், தெலுங்கில் தலா ஒரு படம் வெளியாகி உள்ளது. கணவர் ராஜசேகர் கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா ராஜசேகர் இயக்க, மகள் ஷிவானி ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சேகர்' படம் தெலுங்கில் இன்று வெளியாகி உள்ளது. மலையாளத்தில் வெளிவந்த 'ஜோசப்' படத்தின் தெலுங்கு ரீமேக்தான் இந்தப் படம். படத்திற்கு நல்ல விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது.
ஷிவானி ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' படம் தமிழில் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்திற்கும் விமர்சனங்கள் நல்ல விதமாகவே வந்து கொண்டிருக்கிறது. ஷிவானி இதற்கு முன்பு தமிழில் 'அன்பறிவு' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்றைய நாள் டாக்டர் ராஜசேகர் குடும்பத்திற்கு மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்துள்ளது.